வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (25/04/2018)

கடைசி தொடர்பு:11:00 (25/04/2018)

பெண்கள், குழந்தைகளுக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு! கிரண்பேடி அறிவிப்பு

'பெண்கள், குழந்தைகளுக்கு 5 அடுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் புதிய அமைப்பு தொடங்கப்படும்' என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், குடும்ப நல ஆலோசகர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கான இரண்டு நாள் நெறிப்படுத்தும் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. சாரம் பகுதியில் உள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை அலுவலகத்தில் நடைபெற்றுவரும் முகாமை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர். இரண்டு நாள்கள் நடைபெறும் முகாமில், மகளிர் குழுக்கள், அங்கன்வாடி ஊழியர்கள், பெண்கள் அமைப்பினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முகாமைத் தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த கிரண்பேடி, “குடும்ப நலனைக் காக்க பெண் காவலர்கள், குடும்ப நல ஆலோசகர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், மகளிர் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆகிய ஐந்து தரப்பினரையும் இணைத்து, புதிய அமைப்பு உருவாக்கப்படும். அந்த அமைப்புக்கு, அமைச்சர் கந்தசாமி மற்றும் எனது பெயரின் முதல் எழுத்தான 'கே' என்று பெயரிடப்படும். புதுச்சேரியைப் பொறுத்தவரை, பெண்களின் பாதுகாப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருக்கிறது. இருந்தாலும், இந்த அமைப்பின்மூலம் மேலும் அதை உறுதிப்படுத்த முடியும். புதுச்சேரியில், காவல்துறையில் களத்தில் உள்ளோர் அனைவரும் வாட்ஸ்அப் குழுமூலம் என்னுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அனைத்து தகவல்களும் எனக்கு உடன் வந்துவிடும். அனைவரும் இணைந்து பணியாற்றினால் பெண்கள், குழந்தைகள் தொடங்கி குடும்பத்தினருக்கும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க