வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (25/04/2018)

கடைசி தொடர்பு:11:15 (25/04/2018)

வாக்கிங் சென்ற டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிக்கு நடந்த கொடூரம்!

ராமநாதபுரத்தில் தினகரன் அணி நிர்வாகி தவமுனியசாமி என்பவர் நடை பயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தவமுனியசாமி மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரத்தில், தினகரன் அணி நிர்வாகி தவமுனியசாமி என்பவர் நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தவமுனியசாமி மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்யக் கோரி, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரன் ஆதரவாளர் தவமுனியசாமி

ராமநாதபுரம் கொத்தர் தெருவில் வசித்துவருபவர், தவமுனியசாமி. முன்னாள் நகராட்சி கவுன்சிலரான இவர், தற்போது  தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராக பொறுப்பு வகித்துவருகிறார். இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம்-மதுரை  நெடுஞ்சாலையில் உள்ள சிதம்பரம் பிள்ளை ஊரணியில் உள்ள நடை பாதையில்,  தவமுனியசாமி நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்தபோது,  அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், தான் கொண்டுவந்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதில், தவமுனியசாமியின் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள், ரத்தவெள்ளத்தில் கிடந்த தவமுனியசாமியை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல்

தவமுனியசாமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், போலீஸார்  இந்தத் தாக்குதல் சம்பவம்குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய குற்றவாளியைத் தேடிவருகின்றனர். இதனிடையே தவமுனியசாமி வெட்டப்பட்ட சம்பவம்குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்களும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 'அமைச்சர் மணிகண்டன் தூண்டுதலின்பேரில் தவமுனியசாமி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்று அவர்கள் குற்றம் சாட்டினர். ராமநாதபுரத்தில் பரபரப்பான பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.