`ஊழலுக்கு எதிராகப் போராடினால் பி.சி.ஆர் வழக்கு பாயும்' - அரசு அதிகாரி மிரட்டல்

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்களுக்காக ஊழலுக்கு எதிராகப் போராடியவர்மீது பி.சி.ஆர் வழக்கில் புகார் கொடுத்து, சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த அரசு அதிகாரிமீது சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிசிஆர் வழக்கு மிரட்டலுக்கு வழக்கு தொடர்ந்த இராமநாதன் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சொட்டுநீர்ப் பாசனத்துக்குத் தேவையான சிறு, குறு விவசாயச் சான்றுகள் எனப் பலர் விண்ணப்பித்தும், பல மாதங்களாக வழங்கப்படாமல் காலம் தாழ்த்திவந்துள்ளனர் அதிகாரிகள். மக்கள் பணிகளை மறந்து, சட்டத்துக்கு விரோதமாக தாசில்தார் கோபியும் வருவாய் ஆய்வாளர் நல்லதம்பியும் லாரிகள்மூலம் மணல் கடத்திவரும் அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் கடந்த ஜனவரி 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருந்தார், காங்கிரஸ் விவசாயப் பிரிவுத் தலைவர் ராமநாதன். 

தகவல் அறிந்த ஆர்.ஐ., நல்லதம்பி, காங்கிரிஸ் தலைவர் ராமநாதனை தொலைபேசியில் அழைத்து, ''நான் யார் தெரியுமா... நான் ஒரு அரசு அதிகாரி. நான் என்ன கம்யூனிட்டி தெரியுமா? என்மீது புகார் கொடுத்தி  ருக்கிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார், ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினாய் என்று புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புகிறேன்'' என்று மிரட்டியுள்ளார். 

மக்களுக்காக நீண்ட நெடுங்காலமாகப் போராட்டங்களை நடத்திவரும் ராமநாதன், ஆர்.ஐ., நல்லதம்பி மிரட்டல்குறித்து ஆதாரத்துடன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில், ஜனவரி 23-ம் தேதி, ''மக்களுக்காகப் போராடினால் பி.சி.ஆர் சட்டப் பிரிவில் பொய் வழக்குப் போடுவதாக ஒரு அரசு அதிகாரி மிரட்டுகின்றார்'' என்று புகார் அளித்தார். புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் அன்புமணி, வழக்குப் பதிவுசெய்யாமல் காலம்தாழ்த்திவந்துள்ளார். 

சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ராமநாதன், தனது புகார்மீது வழக்குப்பதிவு செய்ய வழக்குத் தொடர்ந்து, ஆர்.ஐ., நல்லதம்பி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவும் பெற்றுவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவு காவல் நிலையத்துக்கு வரவில்லை என்று கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்யாமல், தொடர்ந்து காலம்தாழ்த்தி வருவதாகக்கூறுகின்றார் ராமநாதன். 

இந்தச் சம்பவம்குறித்து இன்ஸ்பெக்டர் அன்புமணியிடம் பேசினோம். 'நீதிமன்ற உத்தரவு நகல் இன்னும் காவல் நிலையத்துக்கு முறையாக வந்துசேரவில்லை. கிடைத்த பிறகுதான் அரசு வழக்கறிஞர்மூலம் ஆலோசனை செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று முடிவுசெய்ய முடியும்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!