`அமைப்பு விஷயங்கள் கசியக் கூடாது' - நிர்வாகிகளுக்கு கமல் எச்சரிக்கை

கமல்

" அதிகாரபூர்வமாக அமைப்பு நிகழ்ச்சிகள், அடுத்தகட்ட மூவ்கள் பற்றி மீடியாவிடம் நிர்வாகிகள் பேசினால், அவர்கள்மீது பாரபட்சமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பை ஆரம்பித்து, அரசியல் டிராக்கில் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார், கமல்ஹாசன். ரயிலில் போய் மக்களைச் சந்திப்பது, யூடியூப் நேரலையில் மக்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, மாதிரி கிராம சபைகளை மாவட்டங்கள் தோறும் நடத்துவது என்று எந்த அரசியல் கட்சிகளும் யோசிக்காத 'புதுசு கண்ணா புதுசு' என்ற பிரத்யேக வழிமுறைகளில் இயங்கி, அனைவரையும் வாயடைக்கவைத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தகட்ட மூவ் சம்பந்தப்பட்ட ரகசியங்கள், மாவட்ட நிர்வாகிகளுக்குத் தான் சொல்வதற்குள், மீடியாவிடம் கசியவிடப்படுகின்றன என்று வந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்டப் பொறுப்பாளர்களை அழைத்து, கடந்த 18-ம் தேதி கடும் எச்சரிக்கைசெய்துள்ளார், கமல்ஹாசன்.

இது சம்பந்தமாக, மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். " அமைப்பின் மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்த கமல்ஹாசன் முடிவுசெய்து, அதற்காக ரகசியமாக மூவ் செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நீதி மய்யத்தின் அகில இந்திய பொறுப்பாளர் கோவை தங்கவேலு, அதற்கான முயற்சியை ரகசியமாகச் செய்துவருகிறார். ஆரம்பகட்ட நிலையில் இருக்கும் இந்த மாநாட்டு ஏற்பாடுகள்குறித்து கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே, சமீபத்தில் அதுபற்றிய விரிவான செய்தியைப் பிரபல தினசரி ஒன்று செய்தி வெளியிட்டது. இதனால் கோபமான கமல்ஹாசன், கடந்த 18-ம் தேதி அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களையும் அழைத்து, 'நம் அமைப்புக்கு முதலில் தேவை கட்டுப்பாடு. தலைமை அறிவிக்காமல், மாவட்ட நிர்வாகிகள் யாரும் மீடியாக்களுக்கு பேட்டி தரக் கூடாது. ரகசியத் தகவல்களை லீக் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், அது நமது அமைப்பின் செயல்பாடுகளைக் குழைக்கும். அதனால், இனி தலைமையில் இருந்து தகவல் சொல்லும்வரை, அமைப்புபற்றிய ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால், சம்பந்தப்பட்ட நிர்வாகிமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'னு எங்களை எச்சரித்து அனுப்பினார்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!