திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் கோயிலில் மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சி! | Festival in trichy temple

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (25/04/2018)

கடைசி தொடர்பு:12:55 (25/04/2018)

திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் கோயிலில் மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சி!

செட்டிப் பெண் மருத்துவம் பார்க்கும்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் செட்டிப் பெண் மருத்துவம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோயில் சீர்மிகு சித்திரைத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான `செட்டிப்பெண் மருத்துவம்’ நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிவபெருமான் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவவழிபாட்டில் நம்பிக்கையும் பக்தியும் கொண்டு வழிபடும் அடியவர்க்கு ஈசனே வந்து அருள்புரிவார் என்பது நம்பிக்கை. அதன்படி செவ்வந்திநாதர் தம்மிடம் தீவிர பக்தி கொண்ட `ரெத்தினாவதி’ செட்டிப் பெண்ணுக்கு அவரின் தாயாக வந்து பிரசவம் பார்த்து சுகப்பிரசவம் செய்து சிவனே தாயுமானவராகக் குழந்தை வரம் அருளினார் என்பது தல வரலாறு. அப்படித் தாயாக ஈசன் வரும்போது அம்பாள் பார்வதியும் கங்கையும் பணிப் பெண்களாக வந்து அருள் புரிந்தனர். அப்போது உண்மையான செட்டிப் பெண்ணின் தாய் வந்தவுடன் தாயுமானவராக வந்த சிவபெருமான் `ரிஷபாரூடராய்’ காட்சி தந்தார்.

இவ்வாறு சிவபெருமான் தாயாக வந்து அருள் புரிந்ததாக ஐதிகம். ஒவ்வோர் ஆண்டும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயிலில் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று செட்டிப் பெண்ணுக்கு வளைகாப்பு இட்டு பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெற்றது. பிறகு, ஐதிகம் செய்யப்பட்டு குழந்தை பிரசவம் நடைபெறும். அடுத்து மாலை ரிஷப வாகனத்தில் தாயான ஈசன் காட்சி தந்து 63 நாயன்மார்களுடன் வீதி உலா வந்து பத்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது தாயாக வந்த ஈசனை வேண்டும் பக்தர்களுக்கு குறைவின்றி அருள் பாலித்து சுகப்பிரசவம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்குச் சுகப்பிரசவ மருந்து வழங்கப்பட்டது.