``பெண் குழந்தைகள் இப்படி நடந்துகொள்ளுங்கள்" அரசுப் பாடப் புத்தகச் சர்ச்சை வரிகள்... ஓர் அலசல்! | Government school textbook creates controversy with its 'conservative' syllabus!

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (25/04/2018)

கடைசி தொடர்பு:12:22 (25/04/2018)

``பெண் குழந்தைகள் இப்படி நடந்துகொள்ளுங்கள்" அரசுப் பாடப் புத்தகச் சர்ச்சை வரிகள்... ஓர் அலசல்!

சர்ச்சை

தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய வரிகள் இருப்பதாக, சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தின், ' REACHING THE AGE OF ADOLESCENCE' என்ற பாடத்தில்தான் அந்த வரிகள் உள்ளன. 'இவற்றையெல்லாம் பின்பற்றினால், பாலியல் தொல்லைகள் நடப்பதைத் தவிர்க்கலாம்' எனத் தொடங்கும் பாராவில், 'பிறர் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் உடைகளை அணியாதீர்கள்' என்று இருக்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதே பெண்கள்தான். ஆனால், அறிவுரையும் அவர்களுக்குத்தான் அளிப்பீர்களா என்கிற கோணத்தில் சர்ச்சை உருவானது. இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் எழுத்தாளரிடம் பேசினோம். 

விஜயலட்சுமி து.விஜயலட்சுமி, அரசுப் பள்ளி ஆசிரியை, கண்ணமங்கலம், வேலூர். 

``முன்பெல்லாம் பெண் பிள்ளைகள் மற்றவர்கள் முன்னிலையில் இப்படித்தான் உட்கார வேண்டும் என வயதில் மூத்த பெண்கள் அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள். 'தவறு நடந்துவிடக்கூடாது. அதற்கு நம் பெண்ணே காரணமாக இருந்துவிடக்கூடாது' என்ற எச்சரிக்கை உணர்வே இதற்கான காரணம். உறவினராக இருந்தாலும் அவர்களிடம் தனிமையில் இருக்கவிட மாட்டார்கள். பெரியப்பா, சித்தப்பா என்றாலும் அவர்களிடம் அதிகம் இருக்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில், பெண்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளில் திட்டமிட்டு நடக்கும் தவறுகள் மிகக் குறைவே. பெரும்பாலான தவறுகள் நொடி நேரத்தில் மனதில் ஏற்படும் சலனங்களாலே நடந்துவிடுகின்றன. இதுபோன்ற தவறுகள் நடக்கக் காரணங்கள் என்ன? தனிமை, உடை அலங்காரம் மற்றும் இருவரின் நெருக்கம். இதையெல்லாம் தவிர்க்கும்பட்சத்தில் தவறு நடக்கும் வாய்ப்பும் குறையும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களையே சரியாக இருக்கச்சொல்வது நியாயமா? ஆணுக்கு அல்லவா அறிவுரை கூறவேண்டும் எனத் தோன்றும். அது உண்மைதான். ஆணுக்கும் நிச்சயமாக அறிவுரை கூறப்பட வேண்டும். அது, ஆண் பிள்ளையைப் பெற்றிருக்கும் ஒவ்வோர் அன்னையின் முதல் கடமை. `பெண்ணை மதிக்க, சக உயிரியாகப் பாவிக்க கற்பிக்க வேண்டும். அதற்குப் பிறகு, சமுதாயத்தின் கடமை என்று ஒன்று உண்டு. பெண்களை விளம்பரப் பொருளாக காட்டும் மனநிலை மாறவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும். ஆக, அனைவரும் சரியாக இருந்தால் மட்டுமே இந்த நிலையை மாற்றமுடியும்.

நான் 15 ஆண்டுகள் பெண்கள் பள்ளியிலும், 8 ஆண்டுகளாக ஆண்கள் பள்ளியிலும் பணிபுரிந்து வருகிறேன். மாணவர்கள் எத்தகைய ஆசிரியர்களை மதிக்கின்றனர் என்று கவனித்துள்ளேன். நடை, உடை மரியாதையை வரவைக்கும் விதத்தில் இருக்கும் ஆசிரியர்களை வணக்கத்துடன் அணுகுகின்றனர். பள்ளிக்குப் பொருத்தமற்ற அல்லது அவரவர் வயதுக்குப் பொருத்தமற்ற உடையை அணிந்துவரும், ஆண் அல்லது பெண் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு மரியாதை குறைகிறது. எந்த மாணவனிடமும் 'என்னை நீ கட்டாயம் மதித்து நடக்க வேண்டும்' எனச் சொல்ல முடியாது. அது பொய்யாக இருக்கும்; நிலையானதும் ஆகாது. மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல, தானாகத் தருவது. ஆசிரியர்களுக்கே இந்த நிலை எனில், மாணவிகள் பற்றி சொல்லவேண்டியதில்லை. உடை என்பதன் பொருள் என்ன என்றே தெரியாமல் இன்றைய இளைய தலைமுறை வளர்ந்துகொண்டிருக்கிறது. பார்க்கும் பெண்களுக்கே அருவெறுப்பு ஏற்படும் வகையில் சிலர் தங்களது பெண் குழந்தைகளுக்கு உடை அணிவிக்கிறார்கள். பெண் சுதந்திரம், நாகரிகம் என்பதெல்லாம் உடையில் அல்ல; உணர்வில் வேண்டும். ஆனால், இங்கே சுதந்திரம் என்பது உடையில் மட்டும் எனத் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சரியாக உடை உடுத்து எனச் சொல்வது தவறு என்றால், சாலைவிதிகளை மதித்து நட, இல்லையென்றால் விபத்து நடக்கும் என்று அறிவுறுத்துவதும் தவறுதானே? மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கும் உடல் உறுப்புகளுக்குக் காட்டும் அக்கறையை, ஏன் நம் உள்ளத்தின் நலத்துக்குக் காட்ட மறக்கிறோம்? மாற்றம் நம்மிலிருந்துதான்!" 

பிருந்தாஎழுத்தாளர் பிருந்தா:

``இந்த விஷயம் பற்றிச் சொல்வதற்கு முன்பு, சின்னக் கதையைப் பார்ப்போம். ஒரு பணக்கார வியாபாரி, எதைத் தொட்டாலும் தோல்வியாக அமைகிறது. அதனால், ஒரு துறவியைச் சந்திக்கிறார். அந்தத் துறவியும் 'நீ பார்ப்பதையெல்லாம் பச்சை நிறமாக அமைத்துக்கொண்டால், தோல்வி உன்னை நெருங்காது' என்கிறார். அந்த வியாபாரியும் தன் வீட்டில் அனைத்தையும் பச்சை நிறத்துக்கு மாற்றுகிறார். வேலைக்காரர்களையும் பச்சை நிற உடைகளையே உடுத்தச் சொல்கிறார். துறவி சொன்னதுபோல, தோல்விகள் விலகி, வெற்றிகள் கிடைக்கின்றன. ஒருநாள், அந்த வியாபாரியின் வீட்டுக்குத் துறவி வந்திருக்கிறார். 'ஏன் வீட்டில் எல்லாமே பச்சை நிறத்தில் இருக்கின்றன?' எனக் கேட்கிறார். 'நீங்கள்தானே நான் பார்ப்பதெல்லாம் பச்சை நிறமாக இருக்க வேண்டும் எனச் சொன்னீர்கள்' என்கிறார் வியாபாரி. அந்தத் துறவி சிரித்துக்கொண்டே, 'அதற்கு நீ ஒரு பச்சை நிற கண்ணாடியை அணிந்திருந்தால் போதுமே' என்றாராம்.

இதுபோலத்தான், சிக்கல் என்பது ஆண் மனதிலும் உடலில்தான் இருக்கிறது. நாம் இந்த உலகத்தையே மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆண் குழந்தையிடம், பெண் குழந்தையை எப்படிப் பார்க்க வேண்டும். பெண்ணின் அனுமதியின்றி அவளின் உடல் பாகங்களைத் தொடக்கூடாது என்றுதான் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆண் குழந்தையைப் பெற்ற அப்பாவிடமும் இதைக் கற்றுத்தர வேண்டியுள்ளது. ஏனென்றால், எனக்குத் தெரிந்தவரை ஒரு பெண் குழந்தைக்கு உடலைப் பற்றி, அவளின் அம்மா உரையாடுவதுபோல, ஓர் ஆண் குழந்தைக்கு அவனின் அப்பா சொல்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கு தங்களின் உடலைக் கையாளுவதைப் பற்றிக் கற்றுத்தருவதே இல்லை. அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் தவறான வழிகாட்டல்களே. 'தவறு செய்யும் அந்த நொடியை கண்ட்ரோல் பண்ணத் தெரிந்தவன் நல்லவன்; கண்ட்ரோல் பண்ணத் தெரியாதவன் கெட்டவன்' என என் நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது. நல்லவனும் எந்த நொடியும் கெட்டவனாகிவிடலாம், எந்தவொரு கெட்டவனும் தன் தவற்றை நினைத்து வருந்தலாம். எல்லாக் காலங்களிலும் பெண்களுக்குத்தான் எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் எடுக்கப்படுகிறது. நாம் பாடம் நடத்தவேண்டியது ஆண் குழந்தைகளிடம்."

செங்கோட்டையன்

'பாடத்திட்டத்தில் இப்படி சர்ச்சைக்குரிய வரிகள் இருக்கின்றனவே' எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டதற்கு, 'புதிதாக உருவாகும் பாடத்திட்டத்தில் அதுபோன்ற வரிகள் இருக்காது. இவையும் மாற்றி அமைக்கப்படும்' எனக் கூறியிருக்கிறார்.

கற்பிக்கும் பாடத்தின் முறையில் மாறுதல் செய்வதுபோல, பாடத்தை உருவாக்கும் கோணமும் ஆரோக்கியமான முறையில் சீர் செய்யப்பட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.


டிரெண்டிங் @ விகடன்