வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (25/04/2018)

கடைசி தொடர்பு:12:50 (25/04/2018)

தாலியைக் காப்பாற்ற கொள்ளையனுடன் போராடிய இளம்பெண்; சென்னையில் நடுரோட்டில் நடந்த மல்லுக்கட்டு

கொள்ளை

சென்னை அயனாவரத்தில், நடுரோட்டில் தாலிச் செயினைப் பறித்த கொள்ளையர்களுடன் போராடி, தாலியை மட்டும் இளம் பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர். 

 சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரின் மனைவி தனலட்சுமி. இவர், அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டு வேலை செய்துவருகிறார். வழக்கம்போல, வேலை முடிந்து நேற்றிரவு தனியாக, வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, தனலட்சுமியைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்துவந்த இரண்டு கொள்ளையர்கள், அவர் கழுத்தில் கிடந்த தாலிச் செயினைப் பறிக்க முயன்றனர்.

இதில் நிலைக்குலைந்த தனலட்சுமி, தாலிச்செயினை கையில் பிடித்துக்கொண்டு, கொள்ளையர்களுடன் கடுமையாகப் போராடினார். திருடன்... திருடன்... என்று அவர் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள், தனலட்சுமியின் செயினை மட்டும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். தாலி மட்டும் தனலட்சுமியின் கையில் இருந்தது.

 இதையடுத்து, அயனாவரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்று அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுமூலம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.