நிர்மலா தேவிக்கு எதிராகப் போராடியவர்கள்மீது துணைவேந்தர் நடவடிக்கை!

'நிர்மலா தேவியுடன் சம்பந்தப்பட்ட  மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் யார் என்பதை விசாரிக்க வேண்டும்' என்று  போராட்டம் செய்தவர்களைப் பழிவாங்கும் வகையில், துணைவேந்தர் செல்லதுரை  நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நிர்மலாதேவிக்கு எதிராக

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெயர் அதிகம் அடிபடத்தொடங்கியது. பல்கலைக்கழகம் வந்து அடிக்கடி தங்கியுள்ளார். இங்குள்ள உயர் பொறுப்பிலுள்ளவர்கள் உதவியில்லாமல் அவரால் செயல்பட்டிருக்க முடியாது. பல்கலைக்கழகத்தில் என்ன மாதிரியெல்லாம் நடக்கிறது என்பதை மாணவிகளிடம் நிர்மலா தேவி பேசிய ஆடியோவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், 'பல்கலைக்கழகத்தில் நிர்மலா தேவிக்கு உதவியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்' என்று பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கத்தினர் சமீபத்தில் போராட்டம் நடத்தினர்.

இவர்களின் போராட்டம்,  சி.பி.சி.ஐ.டி மற்றும் சந்தானம் விசாரணைக்குழுவினரால் விசாரிக்கப்பட்ட துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர் கலைச்செல்வன் தலைமையில், துணைவேந்தருக்கு ஆதரவாக பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நிர்மலா தேவி விவகாரத்துடன் பல்கலைக்கழகத்தை சம்பந்தப்படுத்தக் கூடாது. அப்படி சம்பந்தப்படுத்துகிற பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 கலைச்செல்வன், கோரிக்கை மனுவை பதிவாளர் சின்னையாவிடம் சமீபத்தில் கொடுத்தார். போராட்டத்துக்கு தலைமை வகித்த கலைச்செல்வனும், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பதிவாளர் சின்னையாவும் சி.பி.சி.ஐ.டி-யால் விசாரிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில், துணைப்பதிவாளர் முத்தையாவையும், ஓய்வூதியர் நலத்துறை அலுவலர் முருகனையும் வேறு மாவட்டத்திலுள்ள உறுப்புக் கல்லூரிகளுக்கு இடம் மாற்றி, துணைவேந்தர் அறிவித்துள்ளார். இதன்மூலம், 'நிர்மலா தேவி விவகாரத்தில் யாரும் பேசக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்' என்று பல்கலைக்கழக அலுவலர், ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!