`இன்னும் பல நிர்மலாதேவிகள் சிக்குவார்கள்!’ கல்லூரி முன்னாள் முதல்வர் பேட்டி ! | Former college president press meet about Nirmala devi issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:48 (25/04/2018)

கடைசி தொடர்பு:14:10 (25/04/2018)

`இன்னும் பல நிர்மலாதேவிகள் சிக்குவார்கள்!’ கல்லூரி முன்னாள் முதல்வர் பேட்டி !

 

 


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கூட்டமைப்பினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அந்தக் கூட்டமைப்பின் செயலரும் மதுரா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முரளி கூறுகையில், `ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழுவின்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரிடம் நாங்கள் அளிக்கும் புகாரால் எவ்வித பயனும் இருக்காது. அவர் ஆளுநர் , பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோருக்கு ஆதரவாகச் செயல்படும் நிலைதான் உள்ளது.

எனவேதான் சமூகத்தின்மீது அக்கறையுடன் செயல்பட்டுவரும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, அரிபரந்தாமன் ஆகியோரையும் ஓய்வு பெற்ற நேர்மையான கல்வியாளர்களைக்கொண்டு, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பணியாளர்கள் மற்றும் பேராசிரியர் போன்றவர்களைத் துணைவேந்தர் அச்சுறுத்திவருகிறார். தேர்வாணையர், துணை தேர்வாணையர், துணைவேந்தர் உள்ளிட்ட நபர்கள்மீது குற்ற வழக்கு இருக்கும் நிலையில் மூன்று நபர்களும் பதவியிலிருப்பது சட்ட விரோதமாகும். பல்கலைக்கழக யு.சி.ஜி விதிகளும் மீறப்பட்டுவருகின்றன.  

இப்பிரச்னையில், முருகன் மற்றும் கருப்பசாமிமீது மட்டும் குற்றம் சாட்டப்படுவது உயர் அதிகாரிகள் தப்பிக்கும் வேலையாகும். பல்கலைக்கழகத்தில் முழுமையாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். இன்னும் பல நிர்மலாதேவிகள் சிக்குவார்கள்’ என்று தெரிவித்தனர் .