வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (25/04/2018)

கடைசி தொடர்பு:13:57 (25/04/2018)

`18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் !' - தினகரனுக்கு `செக்' வைக்கிறாரா விவேக்?

விவேக்கைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகிறார் தினகரன். ஆனால், திவாகரன் மீது சிறுவயது முதலே அதிக பாசம் வைத்திருப்பவர் விவேக். தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் பலரும் விவேக்கின் பிடியில் உள்ளனர். தினகரன் அச்சத்துக்கு இதுவும் ஒரு காரணம்' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். 

`18 தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் !' - தினகரனுக்கு `செக்' வைக்கிறாரா விவேக்?

விவேக் ஜெயராமன்

' ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ விவேக் ஜெயராமன் யார் பக்கம்? ' என விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.  `விவேக்கைத் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகிறார் தினகரன். ஆனால், திவாகரன் மீது சிறுவயது முதலே அதிக பாசம் வைத்தி ருப்பவர் விவேக். தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் பலரும் விவேக்கின் பிடியில் உள்ளனர். தினகரன் அச்சத்துக்கு இதுவும் ஒரு காரணம்' என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். 

தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தால், குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள். `என்ன இப்படி அடிச்சுகிட்டு இருக்காங்க...நாங்க எந்தப் பக்கம் செல்வது?' எனக் குடும்ப ஆட்களுக்குப் போன் போட்டு விசாரித்துக்கொண்டிருக்கின்றனர். வெற்றிவேலின் ஃபேஸ்புக் பதிவுக்கு நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார் புகழேந்தி. தினகரனுக்கும் திவாகரனுக்கும் சமசர உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு, சசிகலா ஆதரவாளர்கள் வந்துவிட்டனர். அதிலும், நேற்று மன்னார்குடியில் திவாகரன் கொடுத்த பேட்டியும் சுவாமிமலையில் தினகரன் கொடுத்த பேட்டியும் விரிசலை அதிகப்படுத்திவிட்டன. `சசிகலாவைச் சந்தித்துப் பொய்யான தகவல்களைக் கொடுத்து வருகிறார் தினகரன். இனி தினகரனுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அ.ம.மு.க நேற்று முளைத்த காளான். நாங்கள் அம்மா அணி என்றே தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் அம்மா அணி என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிடுவோம்' எனக் கடுகடுத்தார் திவாகரன். இதற்குப் பதில் கொடுத்த தினகரனோ, `சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது காட்டுகிறார் திவாகரன். சசிகலாவைப் பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்குத் தெரியும்' எனக் கொதித்தார். இந்நிலையில், இன்று மன்னார்குடியில் திவாகரனைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறார் விவேக். இந்தத் தகவல் தினகரன் ஆதரவாளர்களை உற்றுக் கவனிக்க வைத்துள்ளது. 

தினகரன்``ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கார்டன் கணக்கு வழக்குகளை விவேக் கவனித்து வருகிறார். நிதியைக் கையாளும் மொத்த அதிகாரமும் விவேக் கையில்தான் இருக்கிறது. 18 எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க அரசு தகுதி நீக்கம் செய்த பிறகு, எந்தவித வருமானத்துக்கும் வழியில்லாமல் அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலரது நிதித் தேவைகளை விவேக்தான் கவனித்து வருகிறார். தற்போது நடக்கும் குடும்ப யுத்தத்தில் விவேக் யார் பக்கம் இருப்பார் என்றுதான் அனைவரும் கவனித்து வருகின்றனர்" என விவரித்த கார்டன் பணியாளர் ஒருவர், ``ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தினகரனோடு இளவரசி குடும்பம் முரண்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியானபோது, தினகரனுடன் கடுமையாகச் சண்டை போட்டார் கிருஷ்ணபிரியா. அந்த நேரத்தில் விவேக் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், `தேர்தல் செலவுக்குக்கூட அந்தப் பையனிடம் போய் நிற்க வேண்டியுள்ளது. எப்போது கேட்டாலும், `சின்னம்மா சொன்னால் தருகிறேன்' எனப் பதில் கொடுக்கிறார் என விவேக் பற்றி சசிகலாவிடம் புகார் தெரிவித்தார் தினகரன். இதனால், விவேக்குக்குச் சில மனவருத்தங்கள் ஏற்பட்டன. 

திவாகரன்இந்தப் பிரச்னை ஓய்வதற்குள், திவாகரனோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் தினகரன். இந்தச் சண்டையில் திவாகரன் பக்கம் விவேக் செல்வதற்கு வாய்ப்பு அதிகம். காரணம், மைசூரில் உள்ள ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் விவேக் அப்பா ஜெயராமன் இறந்த பிறகு, அவரைத் தூக்கி வளர்த்தவர் திவாகரன். அவரது படிப்பு விஷயங்களையும் அவர்தான் பார்த்துக்கொண்டார். இதனால் சிறு வயதிலிருந்தே திவாகரன் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். அரசியலுக்குள் தினகரன் வராத காலகட்டங்களில், சுமார் பத்து ஆண்டுகாலம் தினகரனோடு பேசாமல்தான் இருந்தார் விவேக்.

கட்சிக்குள் நுழைந்த பிறகுதான் இருவருக்கும் பேச்சுவார்த்தையே தொடங்கியது. நிதி விவகாரம், தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் என விவேக் கையில் இருக்கும் ஆயுதங்கள், தினகரன் வட்டாரத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த எம்.எல்.ஏ-க்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அடுத்தகட்ட ஆட்டமே தொடங்கவிருக்கிறது. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வரும்போது, தினகரன் தரப்பினரின் செல்வாக்கு உடைபடவும் வாய்ப்பு அதிகம். இதை உணர்ந்துதான், மணிக்கொருமுறை விவேக்கைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் தினகரன்" என்றார் விரிவாக. 

``தினகரன்-திவாகரன் மோதல்கள் குறித்து சசிகலாவின் கவனத்துக்குத் தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். நடராசன் துக்க நிகழ்வு முடிந்து கிளம்பும்போதும், `நீங்க எல்லாம் ஒற்றுமையாக இருக்கணும்னுதான் ஆசைப்படறேன். இணைந்து செயல்பட்டால்தான் நமக்கு நல்லது' என உருக்கமாகப் பேசிவிட்டுச் சென்றார் சசிகலா. அடுத்து வந்த நாள்களிலேயே திவாகரனைக் கட்டம் கட்டும் முடிவுக்கு வந்துவிட்டார் தினகரன். இனி எந்தக் காலத்திலும் இந்த மோதல் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. இதனால் கூடுதல் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா" என்கிறார் மன்னார்குடி குடும்ப உறவினர் ஒருவர். 


டிரெண்டிங் @ விகடன்