வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (25/04/2018)

கடைசி தொடர்பு:15:45 (25/04/2018)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்!

ன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்

தாணு, மால், ஐயன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே தாணுமாலயனாகக் காட்சிதரும் புனிதத் தலம், சுசீந்திரம். இங்குதான் தேவர்களின் தலைவன் இந்திரன் சாப விமோசனம் பெற்றார். கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில், அதிக நாள்கள் திருவிழா நடக்கும் இந்தக் கோயிலில், மார்கழி மாதம் 10 நாள்கள் நடக்கும் திருவிழாவில், பெரிய சுவாமி தேர் உள்ளிட்ட 4 தேர்கள் ஓடும். அடுத்ததாக, சித்திரை மாதம் நடக்கும் 10 நாள் திருவிழாவில், சுவாமி தேர் தவிர மீதமுள்ள 3 தேர்கள் ஓடும். ஆவணி மாதம் மற்றும் மாசி மாத திருவிழாக்களின்போது, ஒரு தேர் ஓடும். மாசி மாதத் திருவிழா 9 நாள்கள் மட்டுமே நடத்தப்படும்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 9-ம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் திரளாகக் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர். 10-ம் நாளான நாளை, தெப்பத்திருவிழா நடைபெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க