‘இறந்த அந்த 30 ஆயிரம் இளைஞர்கள் இருந்திருந்தால்’ - மனிதம் பேசும் டிராஃபிக் டி.எஸ்.பி! | I Wish those 30,000 people are alive - DSP Opens up

வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (25/04/2018)

கடைசி தொடர்பு:13:53 (25/04/2018)

‘இறந்த அந்த 30 ஆயிரம் இளைஞர்கள் இருந்திருந்தால்’ - மனிதம் பேசும் டிராஃபிக் டி.எஸ்.பி!

‘இறந்த அந்த 30 ஆயிரம் இளைஞர்கள் இருந்திருந்தால்’ - மனிதம் பேசும் டிராஃபிக் டி.எஸ்.பி!

திருச்சி திருவெறும்பூர் ரவுண்டானா அருகே கடந்த மாதம், காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் உஷா தடுமாறி சாலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம், நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. `காவல் துறையில் உள்ள பலரும் இதுபோன்று மனிதநேயம் இல்லாமல்தான் இருக்கின்றனர்’ என்று பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், மனிதம் பேசும் ஆட்களும் காவல் துறையில் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாகச் செயல்பட்டு வருகிறார் ஈரோடு டிராஃபிக் டி.எஸ்.பி சேகர்.

மக்களுக்குப் போக்குவரத்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் எடுப்பது, பாடல் எழுதுவது, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்து உரையாற்றுவது என மனிதர் எப்போதுமே ஆக்டிவாகச் செயல்பட்டு வருகிறார். இவரின் சமீபத்திய சாதனை, ஈரோடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விழிப்புஉணர்வு சம்பந்தமான கண்காட்சியை 100 நாள்கள் வெகுசிறப்பாக நடத்தி முடித்ததுதான்.

இளைஞர்கள்

ஜனவரி 4-ம் தேதி ஈரோடு பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போக்குவரத்து விழிப்புஉணர்வு கண்காட்சி ஏப்ரல் 13-ம் தேதி வரை 100 நாள்கள் நடைபெற்றது. போக்குவரத்துத் தொடர்பாகச் சுமார் 400 புகைப்படங்களைக் கொண்டு இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த 100 நாள்களில் தினமும் ஒரு பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களைக் கண்காட்சியைப் பார்க்க அழைத்து வந்து சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புஉணர்வு குறித்து எடுத்துரைத்திருக்கின்றனர். அந்தவகையில் மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என 2 லட்சம் பேருக்கு இந்தக் கண்காட்சியின் மூலம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி பரபரப்பான பணிச் சூழலில் இருந்த டிராஃபிக் டி.எஸ்.பி சேகரிடம் பேசினோம். ``2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தோரின் எண்ணிக்கை 1,40,000. அதேபோல தமிழகத்தில் 18 ஆயிரம் பேரும், ஈரோட்டில் 613 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். மேலும், 2017-ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் 4,25,000 பேர். அந்த எண்ணிக்கை தமிழகத்தில் 44,500 ஆகவும், ஈரோட்டில் 1,913 ஆகவும் இருக்கிறது. `ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கத் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எஸ்.பி சிவக்குமார்  உத்தரவிட்டதையடுத்து, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தினோம். அந்தவகையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்துகளின் இறப்பு 42 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” என்றார்.

இளைஞர்கள்

தொடர்ந்து பேசிய அவர், ``மனித உயிர் தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் 60 ஆண்டுகளாவது வாழ வேண்டும். அந்தப் பாதுகாப்பான சூழல் நாட்டில் உருவாக வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் சாலை விபத்தில் மடிந்துபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு குடும்பத்தில் தற்போது ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தாம் இருக்கிறார்கள். அவர்கள் இறந்துபோனால், குடும்பநிலை என்னாவது? பிள்ளைகளை இழந்து நடைபிணங்களாக வாழும் பெற்றோர்களைப் பார்க்கையில் மனம் அவ்வளவு கணக்கிறது.

இந்தியாவில் 2017-ல் சாலை விபத்தில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். கி.பி.1600-ல் இளைஞர்கள்இந்தியாவுக்குள் நுழைந்த பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம். ஆனால், அவர்கள்தாம் 30 கோடி இந்திய மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்தனர். அன்றைக்குப் பெரிய அளவு அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில், இன்றைக்குச் சட்டம், நிர்வாகம் எனப் பல துறைகள் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. 2017-ல் 30 ஆயிரம் இளைஞர்கள் எவ்வளவு சாதனை செய்திருக்க முடியும்? மகாத்மா காந்தியோ, அப்துல் கலாமோ அல்லது நேருவோ சாலை விபத்தில் 25 வயதில் இறந்திருந்தால், இந்தியாவின் தற்போதைய நிலை என்ன? இதனைக் கருத்தில் கொண்டுதான் இளைஞர்கள் மத்தியில் நான் ஆக்கப்பூர்வமான பிரசாரம் மற்றும் விழிப்புஉணர்வுகளை ஏற்படுத்தி வருகிறேன்” என்றார் மகிழ்ச்சியுடன்.

டிராஃபிக் டி.எஸ்.பி சேகர், போக்குவரத்து விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில், 2011-ல் `உன் வாழ்க்கை உன் கையில்’ என்ற குறும்படத்தையும், 2012-ல் குற்றத் தடுப்பு விழிப்புஉணர்வு சம்பந்தமாக `எது குற்றம்?’ என்ற குறும்படத்தையும் இயக்கியிருக்கிறார். மேலும், அந்தக் குறும்படங்களில் பாடல்களையும் எழுதி அசத்தியிருக்கிறார்.

சாலை விபத்துகளைத் தடுக்கப் பொதுமக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்திச் செயல்பட்டு வரும் டிராஃபிக் டி.எஸ்.பி சேகருக்கு ஒரு ராயல் சல்யூட்!

 


 


டிரெண்டிங் @ விகடன்