வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (25/04/2018)

கடைசி தொடர்பு:16:59 (25/04/2018)

நிர்மலா தேவியின் வலதுகரத்துக்கு `ஸ்கெட்ச்' - சி.பி.சி.ஐ.டி-க்கு வந்த சீக்ரெட் கடிதம் 

நிர்மலா தேவி

நிர்மலா தேவிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட ஒருவர்குறித்த விவரங்கள், சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குக் கடிதமாக வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில், போலீஸாரின் சந்தேகப்பார்வை பலர்மீது விழுந்திருந்தாலும், மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவிப் பேராசிரியர் முருகனை போலீஸார் தேடிவந்தனர். சில தினங்களுக்கு முன்பு, பல்கலைக்கழகத்தில் வைத்து முருகன் கைதுசெய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த கருப்பசாமி, இன்று மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தொடர்ந்து, முருகனை ஐந்து நாள் காவலில் எடுத்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார். போலீஸ் காவல் முடிந்து நிர்மலா தேவி, இன்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, வரும் 28-ம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையிலிருக்கும் நிர்மலா தேவியை ரகசியமாகக் கண்காணிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அவரைச் சந்திக்க வரும் நபர்களின் தகவல்களையும் சேகரிக்க உளவுத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில், "நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், இந்த வழக்கு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. நிர்மலா தேவி மட்டுமல்லாமல், இந்த வழக்கில் எங்களுக்கு இன்னும் சிலர்மீது சந்தேகம் இருக்கிறது. அதில், முருகனைக் கைதுசெய்துவிட்டோம். கருப்பசாமியை நாங்கள் தீவிரமாகத் தேடுவதையறிந்த அவர், இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்துள்ளோம். 

இந்த வழக்கைப் பொறுத்தவரை, நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பது முக்கியக் கேள்வியாக இருக்கிறது. அதற்கான விடை இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நிர்மலா தேவியும் அதுதொடர்பாக முழுமையாகப் பேசத் தயங்குகிறார். பெண் போலீஸ் டீம் எவ்வளவோ முயன்றும் அவரிடமிருந்து முழுவிவரத்தைப் பெற முடியவில்லை.

இந்தச் சமயத்தில்தான், எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், வழக்கு தொடர்பான முக்கியத் தகவல்கள் இருந்தன. நிர்மலா தேவிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட நபரின் தகவல்கள் அதில் மறைமுகமாக இடம் பிடித்திருந்தன. அந்த நபர், யார் என்று விசாரித்துவருகிறோம். எங்களின் விசாரணையில், நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரியில்தான் அவர் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. மேலும், நிர்மலா தேவியுடன் அடிக்கடி டெல்லி, சென்னைக்கு விமானத்தில் அந்த நபர் சென்றுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.  இதனால், அந்த நபரிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். அவரிடம் விசாரித்தால், நிர்மலா தேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்ற தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டப்போது, கடிதம் குறித்து விசாரித்து வருகிறோம். அதில் உள்ள தகவல்களை வெளியில் தெரிவித்தால் விசாரணை பாதிக்கும். மேலும் அந்தக் கடிதத்தை யார் அனுப்பினார் என்ற விவரமும் இல்லை" என்றார்.