மெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள் | Police stopped two wheelers with mechanics

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (25/04/2018)

கடைசி தொடர்பு:19:24 (25/04/2018)

மெக்கானிக்குடன் சாலையில் நின்ற போலீஸார்... கதிகலங்கிப்போன இருசக்கர வாகன ஓட்டிகள்

சாலை விபத்துக்களைக் குறைக்க எக்ஸ்-எல் சூப்பர் மற்றும் டூவீலர்களுக்குப் பிரேக் வைக்கும் நடவடிக்கையில் அரியலூர் போலீஸார் ஈடுபட்டனர். போலீஸாரின் இச்செயல் வரவேற்பை பெற்றுள்ளது. போலீஸாரின் சோதனையில் 300 வாகனங்களில் 270 வாகனங்களுக்கு பிரேக் சரியாக இல்லாதது தெரியவந்தது.

                                        

அரியலூா் மாவட்டத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிமென்ட் ஆலைகள் உள்ளன. 166-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புச் சுரங்கங்கள் உள்ளன. இந்தச் சிமென்ட் ஆலைகளுக்கு சுரங்கங்களிலிருந்து ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் மற்றும் சிமென்ட் மூட்டைகளை உள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கில் லாரிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.

                                 

இந்த லாரிகளால் சாலைகளில் கடும் நெருக்கடி ஏற்படுவதோடு பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனங்களில் குறிப்பாக, எக்ஸ்எல் சூப்பர் ரக வாகனங்கள் அதிக அளவு விபத்தில் சிக்குகின்றன. இந்த விபத்தைக் குறைக்கும் விதமாக அரியலூா் நகர போலீஸார் புறவழிச்சாலை, ஆட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் எக்ஸ்எல் சூப்பர் ரக இரு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களை நிறுத்தி அந்த வாகனங்களுக்கு மெக்கானிக்குகளை வைத்து பிரேக் சரி செய்து அனுப்பும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா்.

                               

இன்று தொடங்கிய இந்த விபத்து குறைக்கும் நடவடிக்கைகளில் 300 வாகனங்களில் 270 வாகனங்களில் சரிவர பிரேக் இல்லாதது தெரியவந்தது. அவற்றைப் போலீஸார் சரி செய்து அனுப்பினா். அப்போது தலைக்கவசம் போட்டு வாகனம் ஓட்ட அறிவுறுத்தினா். இச்செயல் மாவட்டத்தில் காவல்துறையின்மீது நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனோதானம் என்று வண்டி ஓட்டுபவர்கள் போலீஸாரின் நடவடிக்கையைப் பார்த்து கலக்கத்தில் உள்ளனர்.