`பிச்சை கேட்காமல் சாகும் வரை உழைத்தார்’ - குடும்பத்தைப் பிரிந்த மும்பை முதியவரின் சோகக்கதை  | This mumbai old man leaves us inspirational story

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (25/04/2018)

கடைசி தொடர்பு:16:10 (25/04/2018)

`பிச்சை கேட்காமல் சாகும் வரை உழைத்தார்’ - குடும்பத்தைப் பிரிந்த மும்பை முதியவரின் சோகக்கதை 

முதியவர் சடலம்

 குடும்பத்தைப் பிரிந்து, சென்னை பிளாட்பாரத்தில் தங்கிய மும்பை முதியவர், இன்று விமான நிலையத்தின் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலைய பாலத்தின் கீழ் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடப்பதாக மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து சென்றனர்.  உடனடியாக 108-க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மயங்கிக் கிடந்தவரை பரிசோதித்துவிட்டு முதியவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர் யார் என்று போலீஸார் விசாரித்தனர். அவரது செல்போனில் மனைவி என்ற பெயரில் இருந்த நம்பரை போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது, அவரது பெயர் டேனியல் குமரவேல் என்றும் மும்பையைச் சேர்ந்தவர் என்றும் தகவல் தெரிந்தது. டேனியல் குமரவேல் இறப்பு குறித்து அவரின் மனைவிக்குப் போனில் போலீஸார் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர், சென்னைக்கு வருவதாகத் தெரிவித்தார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மும்பையைச் சேர்ந்த டேனியல் குமரவேல், குடும்பத்தினருடன் சண்டைபோட்டுவிட்டு சென்னைக்கு வந்துள்ளார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் அவர் தங்கியிருந்தார். கூலி வேலை பார்த்த அவர், பல்லாவரத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு சாப்பிடச் செல்வாராம். அவரது சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

டேனியல் குமரவேல் இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது உடமைகள் இருந்தன. அதை சோதித்து பார்த்தபோது, வங்கி பாஸ் புக், ஆதார் கார்டு, பைபிள், உடைகள் இருந்தன. பாஸ் புக்கில் 8,500 ரூபாய் பணம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது, 2017-ல் பிரின்ட் செய்யப்பட்டது. இதனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மும்பையைச் சேர்ந்த முதியவர், அநாதையாகச் சென்னையில் பிளாட்பாரத்தில் இறந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் வந்த பிறகுதான் முழுவிவரம் தெரியவரும்" என்றனர்.  

டேனியல் குமரவேல் குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், "பிளாட்பாரத்தில் தங்கும் அவர், பைபிளை படித்துக்கொண்டே இருப்பார். அவரைச் சந்திக்க சிலர் வருவார்கள். யாரிடமும் பண உதவி கேட்க மாட்டார். தன்னால் முடிந்த வேலைகளைச் செய்வார். அதற்கான கூலியைப் பெற்று அந்த வருமானத்தில் சாப்பிடுவார். தமிழில் அவர் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். மற்றபடி அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது" என்றனர்.