வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/04/2018)

கடைசி தொடர்பு:17:15 (25/04/2018)

`குடிக்காதே' என்று சொன்னதால் ஆத்திரம் - சென்னையில் மனைவியைக் கொலை செய்த கணவன்

கொலை


 மது குடிப்பதைத் தட்டிக்கேட்ட மனைவியை அம்மிக்கல்லால் கொலை செய்த கணவனைப் போலீஸார் கைதுசெய்தனர். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவர் மனைவி முபாரக் பேகம். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அப்துல் ஜாபருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்படும். குடும்பச் செலவுக்கும் அப்துல் ஜாபர் பணம் கொடுப்பதில்லை.
வழக்கம்போல நேற்றிரவும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் அப்துல் ஜாபர். அதை முபாரக் பேகம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு, முபாரக் பேகம் தூங்கச் சென்றுவிட்டார். ஆனால், அப்துல் ஜாபர் தூங்காமல் மனைவிமீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

கொலையாளிகுடிபோதையிலிருந்த அவர் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த முபாரக் பேகம் தலையில் அம்மிக்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். இதில் அவர் தலைநசுங்கி இறந்தார். பிறகு, அங்கிருந்து அப்துல் ஜாபர் தப்பி ஓடிவிட்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முபராக் பேகம் வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முபாரக் பேகத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த அப்துல் ஜாபரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, குடிப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் மனைவியைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். 


குடிப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட மனைவியை அவரின் கணவரே அம்மிக்கல்லால் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.