வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (25/04/2018)

கடைசி தொடர்பு:16:46 (25/04/2018)

``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்!'' - திருமாவளவன் காட்டம்!

``தலித் மக்கள் மீதே குற்றம்சாட்டுவது உள்நோக்கம்!'' - திருமாவளவன் காட்டம்!

``வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள்'' என்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். ஆனால், ``பாதிக்கப்பட்ட தலித் மக்களை மேலும் பாதிக்கிற வகையில், `வன்கொடுமைத் தடுப்புச் சட்ட'த்தை வலுவிழக்கச் செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயலிழக்கச் செய்யவேண்டும்'' என்று போர்க்கொடி தூக்கிவருகின்றனர் பட்டியல் சமூக அமைப்பினர்.

கடந்த மார்ச் மாதம் `வன்கொடுமை தடுப்புச் சட்ட'த்தில் சில திருத்தங்களைச் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நாடு முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில் நடைபெற்றப் போராட்டங்களின்போது, வன்முறை வெடித்ததால் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதைத்தொடர்ந்து இந்தச் சட்டத் திருத்தம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்கின்றன. 

தமிழகத்திலும், பல்வேறு தலித் அமைப்புகள் `இந்தச் சட்டத் திருத்த'த்துக்கு எதிராக ஓரணியில் திரண்டு வருகின்றன. அந்தவகையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்கக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சென்னையில் நேற்று (24-4-2018)நடத்தியப் போராட்டம் சென்னையையே குலுங்கச் செய்துவிட்டது! 

தொல்.திருமாவளவன்

இந்தப் போராட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், புரட்சி பாரதம், இந்தியக் குடியரசுக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஆதித்தமிழர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டன. 

`வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை செயலிழக்கச் செய்ய அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். மேலும், அந்தச் சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. 
இந்நிலையில், இந்தச் சட்டத் திருத்தம் குறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், 

``வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ம் ஆண்டே வந்துவிட்டது. ஆனாலும் அதனை எந்த மாநில அரசும் சீரியஸாக எடுத்துக்கொள்வதே இல்லை. தமிழ்நாட்டிலேயே அதற்கு 1995 ம் ஆண்டுதான் விதிகளே வந்தன. ஒரு சட்டம் இயற்றப்பட்டு அதற்கான விதிமுறைகள் வரையறுக்கப்பட்ட பிறகுதான் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். அந்த வகையில், தமிழ்நாட்டில், மிகவும் காலதாமதமாக விதிகள் வரையறுக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், அதன்பிறகும்கூட முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. 

ஓரிரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும்கூட, சம்பந்தப்பட்டவர்கள் மீது தீவிரமான புலனாய்வு செய்து தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. ஆக, நடைமுறையில் வெறுமனே ஒப்புக்கு இயங்கிக்கொண்டிருந்த அந்தச் சட்டத்தையே, `எங்களுக்கு ஆபத்தான சட்டமாக இருக்கிறது' என்று சாதியவாதிகள் குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். 

தலித் தலைவர்கள்

இந்த நிலையில், 1989 ம் ஆண்டு சட்டத்தை மாற்றி அல்லது திருத்தி, கடந்த 2015- ம் ஆண்டு `வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதா'வைக் கொண்டுவந்தார்கள். அது சட்டமாகவும் மாறியது. இந்தச் சட்டத்தின்படி,  உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் நீதிவிசாரணை நடைபெறுகிறபோது, `இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே பதிவு செய்துள்ளார். 

அப்படி ஒரு சட்டத்தை, பாதிக்கப்படுகிற மக்கள் பயன்படுத்த முடியாது; பயன்படுத்துகிறவர்கள் அரசு அதிகாரிகள்தாம். அரசாங்கம்தான் சட்டத்தைப் பயன்படுத்தும். ஆனால், பாதிக்கப்படுகிற தலித்துகளையே, `சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்' என்று திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டுவதென்பது, ஒன்று அறியாமையாக இருக்கவேண்டும்... அல்லது உள்நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும். 

தலித் மக்கள் புகார் கொடுப்பதோடு சரி... ஆனாலும் அந்தப் புகாரை காவல்துறை அதிகாரிகள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. ஆக, எங்கள் புகாரை ஏற்றுக்கொள்ளச் சொல்லியே நாங்கள் பெரும் போராட்டம் நடத்தவேண்டியதிருக்கிறது. இந்த நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எங்கள் மீதே குற்றச்சாட்டு வருவதென்பது, அபத்தமானது!'' என்கிறார் அழுத்தம் திருத்தமாக!


டிரெண்டிங் @ விகடன்