குரங்கணி விபத்து! - சென்னை ட்ரெக்கிங் கிளப் பீட்டருக்கு ஜாமீன்

 

கடந்த மாதம் 9-ம் தேதி குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீவிபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. குரங்கணி மலைக்கு ட்ரெக்கிங் சென்ற சென்னை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 36 பேரில் 23 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில், ட்ரெக்கிங் செல்ல ஏற்பாடு செய்த சென்னை ட்ரெக்கிங் கிளப்பைச் சேர்ந்த பீட்டர் உட்பட மூவர்மீது வழக்கு பதிவு செய்தது குரங்கணி காவல்துறை. இதை அறிந்த பீட்டர் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த பீட்டருக்கு போடி நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மாணிக்கவாசகம் முன்னிலையில் பீட்டர் ஆஜரானார்.

பீட்டருக்கு ஆதரவாக இருவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து மதியம் இரண்டு மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மதியம் 3 மணிக்கு பீட்டருக்கு ஜாமீன் வழங்கினார் நீதிபதி. பீட்டர் சார்பாகச் சென்னையிலிருந்து வந்திருந்த அட்வகேட் ஶ்ரீராம் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர் ஆஜராகினர். ஜாமீன் பெற்ற பீட்டர் மற்றும் அவரின் வழக்கறிஞர்கள் காரில் ஏறி புறப்பட்டுச்சென்றனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் பெற பீட்டர் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "தனக்கும் குரங்கணி விபத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த ட்ரெக்கிங் சென்னை ட்ரெக்கிங் கிளப் ஏற்பாடு செய்யவில்லை. கிளப் உறுப்பினர்கள் தாங்களாகவே ட்ரெக்கிங் ஏற்பாடு செய்து சென்றனர். அதனால் தன்னை போலீஸார் கைது செய்யக் கூடாது" எனப் பீட்டர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!