15 நாள்கள் நீதிமன்றக் காவல்! நிர்மலா தேவி சிறையில் அடைப்பு

நிர்மலாதேவியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிர்மலாதேவி

பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் துணை பேராசிரியர் முருகன் ஆகியோரது தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உண்டு எனக் கூறிய அவர், அவர்களது பெயர் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில், இன்று பேராசிரியர் நிர்மலாதேவி ஐந்து நாள்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பிறகு, இன்று மதியம் சாத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். நிர்மலாதேவியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 

காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்பால் பத்திரிகையாளர்களைப் படம் எடுக்க விடாமல் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக இரண்டு நாள்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பின் நேற்று இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த நிர்மலாதேவியின் கூட்டாளி உதவிப் பேராசியர் முருகன், இன்று காலை சாத்தூர் நீதிமன்றம் அழைத்துவரப்பட்டார். அவரிடம் கூடுதலாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி அனுமதி கேட்டதைத் தொடர்ந்து ஐந்து நாள்கள் அனுமதித்து உத்தரவிட்டார் நீதிபதி. அவருக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!