வங்கிக்கு எதிராக 'ஆட்டோ சரோஜா' போராட்டம்! - புதுக்கோட்டையில் பரபரப்பு | 'Auto saroja' fight against Indian bank

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (25/04/2018)

கடைசி தொடர்பு:16:03 (02/07/2018)

வங்கிக்கு எதிராக 'ஆட்டோ சரோஜா' போராட்டம்! - புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கண்டித்து பெண் ஆட்டோ ஓட்டுனர்  அம்பேத்கர் சிலைக்கு முன்பாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவர் புதுக்கோட்டை நகரின்  முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வாடிக்கையாளர்கள் 'ஆட்டோ சரோஜா' என்று அழைப்பார்கள். சந்தைக்கடை,பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் என்று புதுக்கோட்டை நகரின் முக்கிய இடங்களில் சரோஜாவை பார்க்கலாம்.

இவர் புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் சில வருடங்களுக்கு முன்பு நகை கடன் பெற்றுள்ளார். நகைக்கான வட்டித்தொகையை தொடர்ந்து தவறாமல் கட்டி வந்தூள்ளார். மேலும் அதே வங்கியில் கார் லோனுக்கும் விண்ணப்பித்திருக்கிறார். வங்கி அதிகாரிகளும் சரோஜாவுக்கு கார் வாங்குவதற்கான லோனை கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் கார் லோனுக்கு செலுத்தவேண்டிய தவணைத் தொகையை முறையாகசெலுத்தவில்லை என்று வங்கித் தரப்பில் நினைவூட்டல் கடிதம் சென்றிருக்கிறது. இதுதவிர, வங்கியிலிருந்தும் அவருக்கு தவணையை செலுத்தும்படி அடிக்கடி கூறியிருக்கிறார்கள்.
எல்லா  காலக்கெடுவும் முடிந்தநிலையில், வங்கியில்சரோஜா அடகு  வைத்துள்ள நகையை ஏலத்திற்கு விடப் போவதாக வங்கி நிர்வாகம்  அறிவித்திருக்கிறது. அதன்மூலம் கிடைக்கும் பணத்தை காருக்கு எடுத்துக்கொள்வோம் என்று வங்கித் தரப்பில் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சரோஜா வங்கிக்கு சென்று, தன் காரை திருப்பி கொடுத்து விட்டு, "தனது நகையை ஏலம் விட வேண்டாம். காருக்கு உள்ள தொகையை கொடுத்து விட்டு எனது காரை பெற்று கொள்கிறேன்" என்று கூறியதாக சொல்லப்படுகிறது. காரை பெற்றுக்கொண்ட  வங்கி நிர்வாகம் சரோஜாவின் நகையை 3 லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த சரோஜா, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையின் கீழ் நின்று, கையில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியை கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை வைத்துக்கொண்டு, வங்கி நிர்வாகத்தை எதிர்த்து கோசமிட்டாரா.அவரது காரை திரும்ப தரக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மற்றொரு உறவினர் பெண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டார்.விசயத்தைக் கேள்விப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரோஜாவிடம் நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சரோஜா எதற்கும் அசைந்தூக்கொடுக்கவில்லை.  சரோஜா பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால்,அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் புதுக்கோட்டை நகரில் பரபரப்பு ஏற்பட்டது.வங்கிதரப்பில், " சரோஜா,நகைக்கடனையும் கட்டவில்லை. கார் கடனையும் கட்டவில்லை. இதுகுறித்து பலதடவை அவருக்கு முறையாக நினைவூட்டி இருக்கிறோம். அப்படியும் அவர் லோனை கட்டாததால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்"என்றார்கள்.