எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்! - கிராமத்தினரின் குமுறல் | Thiruvallur village people petition to collector

வெளியிடப்பட்ட நேரம்: 20:02 (25/04/2018)

கடைசி தொடர்பு:20:06 (25/04/2018)

எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்! - கிராமத்தினரின் குமுறல்

திருவள்ளூர்

வாழ வழியில்லை என்பதால் எங்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று கூறி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த வல்லம்பேடு மீனவ கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். 

எல்லப்பன்

கடந்த 2016-ம் ஆண்டு பழவேற்காடு அடுத்த வல்லம்பேடு மீனவ கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு கோஷ்டியினாிடையே மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க-வை சேர்ந்த, மெதிபாளையம் பஞ்சாயத்து தலைவர் எல்லப்பன் தரப்பினரும் அண்ணா துரை தரப்பினருக்கும் புயல் பாதுகாப்புக்கூடம் கட்டுவதில்  ஏற்பட்ட தகறாரில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 30  குடும்பத்தினருக்கு பிரச்னை ஏற்பட்டது. அதில் அந்தக்  கிராமத்தைவிட்டு பொதுமக்கள் வெளியேறி அருகில் இருந்த நொச்சிகுப்பம் என்ற கிராமத்தில் உள்ள சமூதாய நலக்கூடத்தில் தஞ்சம் அடைந்தனா். 

 அவா்கள் அனைவரும் மீன்பிடித் தொழிலையே நம்பி உள்ளதால் வாழ்வாதாரம் இழந்து தத்தளித்து வருகின்றனா். அது தவிர, இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளி செல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எங்களை மீண்டும் ஊருக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வெளியேற்றப்பட்ட மக்கள் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் 16 முறை புகாா் அளித்துள்ளனா்.

மனுக் கொடுத்த வல்லம்பேடு லோகேஷ்வரி

ஏற்கெனவே நேரில் சென்று  பல முறை புகாா் அளித்தும் எந்தப் வித பயனும் இல்லை என்று குற்றம் சாட்டிய மக்கள்  திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், போராட்டத்தைத் தொடா்ந்து 30 குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினா்களும் தங்களது அரசு அடையாள அட்டைகளைத் திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவித்தனா். கலெக்டர் சுந்தரவள்ளியை நேரில் சந்தித்து கிராம பொதுமக்கள் அவர்களது வழக்கறிஞர் சின்னதம்பி ஆகியோர் மனு அளித்தனர். அவர்களிடம் கலெக்டர் சுந்தரவள்ளி பொன்னேரி ஆர்.டி.ஒ முத்துசாமியை கேட்டு சொல்கிறேன் என்று பொது மக்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

மெதிப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் எல்லப்பன் அ.தி.மு.க-வை சேர்ந்தவர். வல்லம்பேடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஐந்து கோடி மதிப்புள்ள புயல் பாதுகாப்பு மையம் கட்டடப் பணிக்கு தரமில்லாத உப்பு மணலை பயன்படுத்தியதால் கிராமத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மோதல் முற்றியது. எல்லப்பனுக்கு அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன் ஆதரவு உள்ளதால் அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.