வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (25/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (25/04/2018)

தூத்துக்குடி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட அ.ம.மு.க வினர்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குத் தண்ணீர் சப்ளையை நிறுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

போராட்டம்(அ.ம.மு.க)

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய, காற்று மற்றும் தண்ணீருக்கான அனுமதி கடந்த மார்ச் 31 -ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனால் தற்போது வரை ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் காப்பர் உற்பத்திக்கான காப்பர் மணலை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கக் கூடாது எனத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக சேர்மன் ஜெயகுமாரிடம் மனு அளித்தனர். 

அ.ம.மு.க.வினர் முற்றுகை

மனுவைப் பெற்றுக்கொண்ட அவர், ``ஆலைக்கான காற்று மற்றும் தண்ணீருக்கான அனுமதி காலாவதி ஆகிவிட்டது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து முறையான கடிதம் கிடைக்கப் பெறவில்லை. கடிதம் கிடைத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கான காப்பர் மணல் இறக்குமதியை நிறுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.

அதன்படி, 20 எம்.ஜி.டி., திட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பப்பட்டு வரும் தண்ணீரை நிறுத்திட வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க.,வினர் தூத்துக்குடி சிதம்பர நகரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.ம.மு.க.வினர் முற்றுகை போராட்டம்

செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள, நெல்லைக்குச் சென்றிருந்ததால், அவர் வந்து மனுவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையால், உதவி செயற்பொறியாளர் கென்னடியிடம் மனுவை அளித்தனர்.  

தொடர்ந்து, சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஆலையின் சுற்றுச்சூழல் அனுமதி காலாவதி ஆகிவிட்டது எனத் துறைமுகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் கடிதம் அனுப்பிட வலியுறுத்தி, மாவட்ட  மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் கண்ணனிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அ.ம.மு.க., தெற்கு மாவட்டச் செயலாளர் ஹென்றி தாமஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் ``காற்று மற்றும் தண்ணீருக்கான சுற்றுச்சூழல் வாரிய அனுமதி முடிவடைந்த நிலையில் தண்ணீர் வழங்கி வருவது சட்டப்படி குற்றம். இதனை துறைமுகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்தாததும் குற்றம். இது குறித்து மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும்" என்றார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கையெழுத்து இயக்கம், சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மனு எனச் சட்டப்படி அ.ம.மு.க வினர் செல்வதால் இதனை மற்ற கட்சியினரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க