வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (25/04/2018)

கடைசி தொடர்பு:23:30 (25/04/2018)

`தமிழகத்தை ராணுவ மையம் ஆக்க திட்டம்’ -தெஹ்லான் பாகவி குற்றச்சாட்டு!

மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை ராணுவ மையம் ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி குற்றம்சாட்டினார்.

`மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை ராணுவ மையம் ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி குற்றம்சாட்டினார்.

தெஹ்லான் பாகவி

குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை முன்வைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவிலில் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஓகி புயல் பாதித்தபோது மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்படவில்லை. குமரி மக்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டனர். பா.ஜ.க. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களுக்கு இழப்பீடு கிடைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசு சார்பில் 9,300 கோடி இழப்பீடு கேட்கப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில அரசு உரிய அழுத்தம் கொடுக்காததால் 134 கோடி ரூபாய்தான் மத்திய அரசு ஒதுக்கியது. பேரழிவின்போது மத்திய அமைச்சர் மீனவர்களைப் புறக்கணித்துவிட்டார். காணி மக்களும், பழங்குடி மக்களும் புறக்கணிக்கப்பட்டனர். குமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும். சரக்குப் பெட்டக மாற்று முனையம் வேண்டும் என மக்கள் நீண்டகாலமாகக் கேட்பதாகத் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவிலில் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் நடந்தது

கன்னியாகுமரி துறைமுகத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. துறைமுகத்தால் மீன்வளமும், நஞ்சை, புஞ்சை நிலவளமும் பாதிக்கும். மக்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் தமிழகத்தை ராணுவ மையம் ஆக்க திட்டமிடப்பட்டுள்ளது. குமரி மக்களின் வசதிக்காக ஹெலிபேட் அமைக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் வழங்க வேண்டும். பா.ஜ.க. தலைவர்கள் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ். தனது தொண்டர்களுக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் உள்ளதால் அவர் பதவியில் இருக்கும்போது நியாயமான விசாரணை நடைபெறாது. எனவே, கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும். பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.