இட்லி உப்புமாவால் எதிர்கால உலகைக் காக்க முடியும் என்கிறார் இந்த டென்மார்க் பெண்!

டென்மார்க் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் உணவு வீணாவது (Food Waste) 25% வரை குறைக்கப்பட்டுள்ளது. அந்த மொத்த சாதனைக்குமான காரணமாக செலீனாவை நோக்கி கைகாட்டுகிறது டென்மார்க் அரசு.

இட்லி உப்புமாவால் எதிர்கால உலகைக் காக்க முடியும் என்கிறார் இந்த டென்மார்க் பெண்!

வர் கோபப்பட்டு பேசுவதில்லை. அவர் குரல் வெடித்துச் சிதறுவதில்லை. மிக நிதானமாக, முகம் முழுக்க புன்னகையோடு, மிகத் தெளிவாக தன் கருத்துகளை முன்வைக்கிறார்.

"நீங்கள் செய்வது மிக மோசமான அவமானகரமான செயல். இது நம் இயற்கையை, நாம் சார்ந்திருக்கும் சமூகத்தை, நமக்கான உணவைத் தயாரிப்பவர்களை, இந்தப் பூமியில் வாழும் மிருகங்களை அவமானப்படுத்தும் செயல். ஆம்... உணவை வீணடிப்பதன் மூலமாக உங்கள் மரியாதையையும், நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கிறீர்கள். " 

பெயர்: செலீனா ஜூல் (Selena Juul).

பிறந்து, வளர்ந்தது: ரஷ்யா.

வாழ்வது : டென்மார்க்.

டென்மார்க் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் உணவு வீணாவது (Food Waste) 25% வரை குறைக்கப்பட்டுள்ளது. அந்த மொத்த சாதனைக்குமான காரணமாக செலீனாவை நோக்கி கைகாட்டுகிறது டென்மார்க் அரசு. 

செலீனா ஜூல் - டென்மார்க் - இட்லி உப்புமா

செலீனா ஜூல் (Selena Juul).

ரஷ்யாவில் மிக வறுமையான சூழலில், பஞ்சத்தில் வளர்ந்த செலீனாவுக்கு ஐரோப்பிய நாடுகளைப் பார்த்து ஆச்சர்யம். மிக சாதாரணமாக, எந்தத் தயக்கமுமின்றி உணவுகளை அவர்கள் வீணடிப்பதைக் கண்டு அதிர்ச்சி. இதற்காக தன்னால் முடிந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். 2008 காலகட்டத்தில் "Stop wasting food" என்ற ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்குகிறார். அதன் மூலம், உணவு வீணடிப்பதற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்கிறார். 

சமூகவலைதளங்களில் சில சமயங்களில் பெரும் அதிசயங்கள் நிகழும். அது மிகப் பெரிய புகழைக் கொடுக்கும். செலீனாவுக்கும் அது நடந்தது. அவரின் ஃபேஸ்புக் பக்கம் மிக அதிகமாக பகிரப்பட்டது. சில மாதங்களிலேயே நாடு முழுக்க பிரபலமானார் செலீனா. அவர் முன்வைத்த "உணவு வீண் செய்வதற்கு எதிரான கருத்துகள்" அதிகம் விவாதிக்கப்பட்டன. அதற்கான செயல்திட்டங்களும் செயல்படுத்த பட்டன. 

செலீனா ஜூல் - டென்மார்க்

2050ம் ஆண்டை எட்டும் போது உலக மக்கள் தொகை 900 கோடியை எட்டும் என்று அனுமானிக்கப்படுகிறது. எனில், இன்றிருக்கும் உணவுத் தேவையிலிருந்து 70% அதிக உணவுத் தேவை ஏற்படும். அதை உருவாக்குவதற்கான சாத்தியங்களை ஒரு பக்கம் ஆராய்ந்துக் கொண்டேயிருந்தாலும், இருக்கும் உணவை வீணாக்காமல் சேமித்தாலே அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது செலீனா முன் வைக்கும் கருத்து. 

ஒவ்வொரு வருடமும் உலகளவில் 130 கோடி டன் அளவிற்கான உணவு வீணாக்கப்படுகின்றன. அதில் 30% பருப்பு, 40%-50% வேர் சார்ந்த பயிர்கள் மற்றும் பழங்கள், 20% எண்ணெய், பால் மற்றும் மாமிசம், 35%  கடல் உணவுகள். ஐரோப்பாவில் வீணடிக்கப்படும் உணவுகளைக் கொண்டு மட்டும் 20 கோடி பேரின் பசியைப் போக்க முடியும். இப்படியாக, நாம் வீண் செய்யும் ஒவ்வொரு பருக்கை உணவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 

ஒரு தனிமனிதராக உணவு வீண்செய்யப்படுவதை தடுக்க சில எளிய வழிகளை முன்வைக்கிறார் செலீனா.

உணவு வீண் செய்யக் கூடாது

வீட்டில் என்ன செய்ய முடியும்:

1. உணவுகளை மீண்டும் உபயோகியுங்கள்:

மிக எளிமையான விஷயம் தான். இட்லி மிச்சமானால், அடுத்த வேளைக்கு இட்லி உப்புமா செய்வோமே... அதே தான். இந்த ஒரு விஷயமே உணவு வீண் செய்யப்படுவதில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். 

2. ஃப்ரிட்ஜில் உணவு வரிசை கவனம்:

ஃப்ரிட்ஜில் மிச்சமான உணவுகளை வைப்பதில் கவனம் தேவை. பாதி உபயோகித்ததை கண்ணுக்கு முன்னர் நன்றாகத் தெரியும் வகையில் வைக்க வேண்டும். அப்பொழுது தான் அதை எடுத்து உபயோகிப்போம். புதிய உணவுகளை, பின் வரிசையில் அடுக்க வேண்டும். அதேபோல், ஃப்ரீசரில் வைக்கப்படும் உணவுகளை நாட்கணக்கில் மறந்து அதிலேயே வைத்துவிடக் கூடாது. 

3. தேவையான அளவிற்கு மட்டுமே சமைக்க வேண்டும். 

4. மீதமாகும் உணவுகளைக் கீழே கொட்டாமல் அடுத்தவர்களோடு பகிர்வது நல்லது. 

டென்மார்க் - உணவு வீண் செய்யக் கூடாது

கடைகளுக்குச் செல்லும் போது:

1. முதலில் சூப்பர் மார்க்கெட்களுக்குப் போகும்போது வெறும் வயிற்றில், பசியோடு போவதை தவிர்க்க வேண்டும். அது உங்களை அதிகமாக வாங்கிக் குவிக்க வைக்கும். எனவே, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போவது நல்லது.

2. "மூன்று வாங்கினால் நான்கு இலவசம்" போன்ற விளம்பரங்களுக்கு மயங்காதீர்கள். உங்கள் தேவைக்கு அதிகமாக வாங்காதீர்கள். 

3. சூப்பர் மார்க்கெட்டில் பெரிய கூடைகளையோ, தள்ளு வண்டிகளையோ தேர்ந்தெடுக்காதீர்கள். மாறாக சிறிய கூடைகளை எடுத்துச் செல்லுங்கள். 

4. எக்ஸ்பைரி (Expiry) தேதி நெருக்கத்தில் இருக்கும் பொருட்களை வாங்குங்கள். அது தான் விலை குறைவாக இருக்கும். தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து, சீக்கிரம் அதை உபயோகப்படுத்த இது உதவும். 

5. காய்கறிகள் மற்றும் பழங்களை அதன் வெளி அழகை வைத்து வாங்காதீர்கள். அழகான காய்களும், பழங்களும் தான் விற்கும் என்பதால் கடைக்காரர்கள், மற்றவற்றை வீண் குப்பையாக எறிகிறார்கள்.

இப்படியாக செலீனா முன்வைக்கும் தீர்வுகள் எல்லாமே மிகவும் எளிமையானவை தான். இந்த விஷயங்களை சொல்வதில் என்ன பெரிய சாதனை என்று நினைக்கலாம். ஆனால், செலீனா இதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று இதைச் செயல்படுத்த வைத்திருக்கிறார். 

உணவை வீண் செய்யக் கூடாது - இட்லி - டென்மார்க்

" எனக்கான வாழ்க்கை என்பதே எனக்கில்லை. எனக்கு வார இறுதிகள், கொண்டாட்டங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. உணவு வீணாவதைத் தடுப்பது மட்டும் தான் என் நோக்கம். நாம் நம் காசு போட்டு வாங்கும் உணவை வீணாக்குகிறோம். பணத்தைத் தவிர இதில் எதை இழக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், உணவை வீண் செய்வதன் மூலம் நாம் பணத்தை மட்டுமல்ல இழப்பது...சொல்லப் போனால் பணம் ஒரு விஷயமே இல்லை. உணவை வீண் செய்வதன் மூலம் நம் எதிர்கால சந்ததியை அழிக்கிறோம். அவர்களை பசியில், பஞ்சத்தில் தள்ளிக் கொண்டிருக்கிறோம். இன்று டென்மார்க் மாற்றத்தின் வழியில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்படியே ஒவ்வொரு நாடாக மாறினால்... உலகமே சொர்க்கமாக மாறும்..." என்று சொல்கிறார் செலீனா. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!