வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (26/04/2018)

கடைசி தொடர்பு:07:05 (26/04/2018)

இந்தியாவின் காலாவதி பகுதி தமிழ்நாடா? கொந்தளிக்கு ஜனநாயக வாலிபர் சங்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், ஜனநாயக மாதர் சங்கத்தினரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதுபற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிழக்கு மாநகரச் செயலாளர் பெரியசாமியிடம் கேட்டபோது, ``மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதை தட்டிக்கேட்க முடியாத திராணியற்ற அரசாங்கமாக தமிழக அரசாங்கம் இருக்கிறது. அதனால் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.

இந்தியாவின் காலாவதியான பகுதியாக தமிழகத்தை நினைத்து மனித குலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்ப்பன் திட்டம், மீத்தேன், சாகர் மாலா போன்ற திட்டங்கள் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டும். ஆனால், மத்திய அரசு தமிழகத்தை ஒரு பாராமுகமாக பார்த்து வருவது ஜனநாயக நாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கும்.

12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை என சட்டம் இயற்றி இருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் என சுருக்காமல் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை என்று அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறையும். இவைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கிறோம்'' என்றார்.