வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (26/04/2018)

கடைசி தொடர்பு:07:12 (26/04/2018)

வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கு!

 

கரூர் ஜே.எம்-2 கோர்ட்டில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பதிவுக்காக எஸ்.வி.சேகர் மீது தொடுக்கப்பட்ட  வழக்கு  விசாரணை   வரும் 9-ம் தேதிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

பிரபல ஆங்கில பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டிய ஆளுநரால் சர்ச்சை எழுந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு குரல்களால், பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்டார். ஆனால், இந்த விவகாரத்தை வைத்து பெண் பத்திரிகையாளர்களையும், பத்திரிகை அதிபர்களையும் இணைத்து கேவலமாக சித்திரித்து ஒருவர் தனது பேஸ்புக்கில் போட்ட பதிவை நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் வலைதளத்தில் ஷேர் செய்தார்.  அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி, சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ஆவேசமடைந்த பத்திரிகையாளர்களும், பெண்கள் அமைப்புகளும் எஸ்.வி.சேகருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினர். இதனால், விவகாரம் பெரிதாக, வேறு வழியில்லாமல் எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கோரினார்.  ஆனால், பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாருக்கு எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஸ்.வி.சேகருக்கு எதிராக திருநெல்வேலியிலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்நிலையில், கரூர் ஜே.எம்-2 கோர்ட்டிலும் கடந்த 23-ம் தேதி எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே பிரிவு)யின் தமிழக மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் என்பவர், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மூலமாக இந்த வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி பாக்கியம், வழக்கை இன்று (25.04.2018) ஒத்தி வைத்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 9-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்ததோடு, பத்திரிகையாளர்களின் சாட்சிகள் பதிவு அன்று நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளார்.