சிறைக்குச் சென்று நிர்மலா தேவியிடம் விசாரணை! அதிகாரி சந்தானம் தகவல் | Enquiry officer santham said will enquire to Nirmala devi

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (26/04/2018)

கடைசி தொடர்பு:07:40 (26/04/2018)

சிறைக்குச் சென்று நிர்மலா தேவியிடம் விசாரணை! அதிகாரி சந்தானம் தகவல்

பேராசிரியர் நிர்மலாதேவியிடம் விசாரணை செய்ய சிறைக்கு நேடியாகச் சென்று தகவல் பெற உள்ளதாக விசாரணை அதிகாரி சந்தனம் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் நிர்மலா தேவியிடம் விசாரணைசெய்ய சிறைக்கு நேடியாகச் சென்று தகவல் பெற உள்ளதாக, விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான விசாரணை ஆணையர் சந்தானம், நேற்று  2-ம் கட்ட விசாரணையைத் தொடங்கினார். விசாரணையில், மதுரை மண்டலக் கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் கூடலிங்கம் மற்றும் துறை அலுவலர்கள் 2 பேர் என 3 பேரிடம் ஆணையர் சந்தானம் விசாரணை நடத்தினார். அவரிடம் ஆஜரான அதிகாரிகள், தங்களிடம் உள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். இவர்களிடம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி விவகாரம் குறித்தும், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.

அங்கு, விருந்தினர் இல்லத்தில்  நடைபெற்ற  விசாரணையில், துணைவேந்தர் செல்லதுரை ஆஜரானார். அவரைத் தொடர்ந்து, பல்வேறு துறையினரும் ஆஜராகிய பின், சந்தானம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாலை  3 மணி முதல் 9 மணி வரை நடை பெற்ற பல்கலைக்கழகம் தொடர்பான விசாரணை போதுமானதாக இருந்தது. நாளை (இன்று), மதுரை மத்திய சிறைக்குச் சென்று நிர்மலாவிடம் விசாராணை செய்ய உள்ளேன். இதற்காக,  சிறைத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. பென்ஷனர்கள் பல்கலைக்கழகத்துக்கு எதிராகச் செயல்பட்டால், பென்ஷன் ரத்துசெய்யப்படும் என துணைவேந்தர் கூறியது குறித்து விசாரணைசெய்தேன். இன்னும் முருகன், விஜயதுரை ஆகியோரிடம் விசாரிக்கவேண்டி உள்ளது. வரும் 27-ம் தேதி, அருப்புக்கோட்டைக்குச் சென்று கல்லூரியில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளேன். சி.பி.சி.ஐ.டி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவர் சிறைக்கு வந்தவுடன் விசாரணை நடத்துவேன்" என்று கூறினார்.