வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (26/04/2018)

கடைசி தொடர்பு:08:02 (26/04/2018)

சட்டமன்றத் தேர்தல் எப்போது... வெற்றி யாருக்கு? - அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன ஆரூடம்

''ஜெயிலுக்கு போகக்கூடாது என்பதால், காவிரியையும் கச்சத் தீவையும் தாரை வார்த்து, தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்தான் கருணாநிதி'' என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார்.

அரியலூர் அண்ணாசிலை அருகில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமசந்திரன் தலைமை வகித்தனர். கூட்டத்தில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வரக்கூடிய அனைத்துத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வே வெற்றிபெறும். தி.மு.க செயல் தலைவர், தினமும் எழுந்தவுடன் ஆட்சி கலையும் எனக் கூறிவருகிறார். நான் சொல்கிறேன், 2021-ல் தான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அதிலும், அ.தி.மு.க-தான் அமோகமாக வெற்றிபெறும். மாநில நலனிற்காகவே மத்திய அரசுடன் நல்லுறவில் உள்ளோம்.  தேர்தலின் போதுதான் கூட்டணிகுறித்து ஆலோசனை செய்யப்படும். காவிரி ஒப்பந்தம் 1974-ல் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், தற்போது அவரது மகன் நடைப்பயணம் மேற்கொண்டுவருகிறார். இதை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தி.மு.க செய்த துரோகம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் '' என்று முடித்துக்கொண்டார்.

அடுத்ததாகப் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, '1990-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோதே வலியுறுத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, 23 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கியது அ.தி.மு.க. தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது, இதுபோன்று செய்ததுண்டா? கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தண்ணீர் தர மறுக்கிறது. ஆனால், தி.மு.க இங்கு காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறது. இது எல்லாம் மக்களுக்குத் தெரியாதா? உங்களது கபட நாடகம் வெளி வந்துகொண்டிருக்கிறது. மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்படும். அண்ணன் எடப்பாடியின் ஆட்சி வெகு சிறப்பாக இருப்பதாக மக்கள் நாள்தோறும் சொல்லிவருகிறார்கள். எங்களுடைய நோக்கமே காவிரி மேலாண்மை வாரியம்தான். விரைவில் அமைக்க போராடிக்கொண்டிருக்கிறோம்; வெற்றிபெறுவோம்'' என்று முடித்தார்.