'தேர்தல் நடத்த அதிகாரிகள் வரவில்லை'- போராட்டம் நடத்திய அரசு ஆசிரியர்கள் கைது!

அன்னவாசல் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தேர்தலையொட்டி பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று தினங்களாக  அலுவலகம் வராத தேர்தல் அதிகாரியைக் கண்டித்து, காத்திருப்புப் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில், ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் செயல்பட்டுவருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர்  உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தேர்தலில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த 60 பேர்களின்  வேட்புமனுவை வாங்கியிருந்தனர்.  

'கடந்த 9-ம் தேதி, 38 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மதியம் 1 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுஷியா, அன்னவாசல் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கச் செயலாளர் சிதம்பரம் ஆகியோர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள்" என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 24 -ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 23 மற்றும் 24-ம் தேதிகளில் வேட்பு மனு வாபஸ் பெற  அலுவலகத்தில் காத்திருந்த ஆசிரியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், கூட்டுறவு சிக்கன நாணய சங்கச் செயலாளர் ஆகியோர் அலுவலகத்துக்கே வராததால், ஆசிரியர்கள் ஆத்திரமடைந்தனர். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி  ஆசிரியர் மன்றத்தினர், "தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு வரவேண்டும்; ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும்; முறைகேடுசெய்து பொறுப்பு அறிவிக்கும் நோக்கத்தைக் கைவிடவேண்டும்" என்று வலியுறுத்தி, கடந்த 23-ம் தேதி முதல்நாள் போராட்டத்தைத் தொடங்கினர். அந்தப் போராட்டம் 24-ம் தேதி இரவு வரை நீடித்தது. போராட்டம் நடத்தியவர்களிடம் இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா பேச்சுவார்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

இதையடுத்து மூன்றாவது நாளாக நேற்றும் (25.04.2018) ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்பு அங்கு வந்த இலுப்பூர் டிஎஸ்பி  கோபாலசந்திரன்  பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஆசிரியர்கள், 'தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இல்லை' என்று அவரிடம் கூறிவிட்டனர்.  இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் அழகப்பன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன், ஒன்றிய தலைவர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 28 பேரை அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தார். இதனால் அன்னவாசல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!