பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்! | kamal mourns for the demise of noted singer ms rajeshwari

வெளியிடப்பட்ட நேரம்: 09:41 (26/04/2018)

கடைசி தொடர்பு:09:41 (26/04/2018)

பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்!

மழலையர் குரலில் பாடி பலரையும் ஈர்த்த பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் காலமானார்.

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி நேற்று (25.4.2018) சென்னையில் காலமானார். தனது முதல் சினிமா பாடலைப் பாடி மக்களிடம் கொண்டு சேர்த்தவர் என கமல் ட்விட்டரில் இரங்கலைப் பதிவிட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 500-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர், எம்.எஸ்.ராஜேஸ்வரி. இனிமைமிக்க குழந்தைக் குரலில் பாடும் திறமை பெற்றிருந்த இவர், குழந்தைகள் மற்றும் சிறுமியருக்கு பின்னணிப் பாடகராகத் திகழ்ந்தார். ஏவி.எம் நிறுவனத்தின் 'நாம் இருவர்' படத்தில்  'மஹான் காந்தி மஹானே' பாடலில் தன்  வாழ்க்கையைத் தொடங்கியவர். தொடர்ந்து, சிட்டுக் குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா (டவுன் பஸ்), சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் (கைதி கண்ணாயிரம்), கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடினார். பின் 80, 90'-களில் நாயகன் படத்தில், 'நான் சிரித்தால் தீபாவளி', பாட்டி சொல்லைத் தட்டாதே மற்றும் பேபி ஷாமிலி நடித்த துர்கா, தை பூசம், தெய்வக் குழந்தை ஆகிய படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். இவர்,கே.வி.மஹாதேவன், ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் ஷங்கர் கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடியுள்ளார். ராஜேஸ்வரி, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.

எம்.எஸ்.ராஜேஸ்வரி

 இவரது மறைவுக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன் , `` களத்தூர் கமலை மக்களுக்குக் கொண்டுசேர்த்தது, 'அம்மாவும் நீயே' என்ற பாடலும்தான். அதைப் பாடிய அம்மையார் எம்.எஸ்.ராஜேஸ்வரி நம்மை விட்டு அகன்றார். அவர் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டிருந்தார். தமிழ் சினிமா இசையுலகைச் சார்ந்தவர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

kamal