வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (26/04/2018)

கடைசி தொடர்பு:10:37 (26/04/2018)

11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது! தேர்வு முடிவு வெளியிடும் தேதி அறிவிப்பு

பொதுத்தேர்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அத்துறையின் செயலாளராக இருந்த உதயசந்திரனும் இணைந்து, கடந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்ற, 'ரேங்க்' முறையை ஒழித்தனர். பள்ளிக் கல்வித்துறையில் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டம் மாற்றப்படும் என்று அறிவித்தனர். மேலும், 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டனர். அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக 11- ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வுகள், கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடந்தது. 8,63,668 பேர், இந்தத் தேர்வை எழுதினர். 2,795 மையங்களில் தேர்வுகள்  நடந்தன. 

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததை அடுத்து, இன்று 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ''12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தும்போதே, அந்தந்த விடைத்தாள் திருத்தும் மையங்களிலேயே மதிப்பெண்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டுவிட்டன. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண்ணும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் ஏற்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே, விடைத்தாள்களைத் திருத்திய அன்றே மதிப்பெண் பட்டியல் தயாராகிவிடும். கடந்த ஆண்டு அறிவித்தப்படி, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படும். 12-ம் வகுப்பு தேர்வு முடிகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன'' என்று சொன்னார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க