'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்!'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன? | Nirmala devi's life itself a secret one, says the neighbours

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (26/04/2018)

கடைசி தொடர்பு:12:02 (26/04/2018)

'நிர்மலா தேவி வாழ்க்கையே ரகசியம்தான்!'- காவியன் நகர் மக்கள் சொல்வது என்ன?

 நிர்மலா தேவி

நிர்மலா தேவியின் வீடு அமைந்துள்ள அருப்புக்கோட்டை காவியன் நகர் மக்களிடம் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் வீடு, கல்லூரியிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஆத்திப்பட்டி, காவியன் நகரில் உள்ளது. இந்த வீட்டில்தான் அவர் குடியிருந்தார். அவரை கல்லூரிக்கு அழைத்துச்செல்ல கார் வரும். அதில்தான் அவர் செல்வார். கல்லூரி முடிந்ததும் காரில்தான் வீட்டுக்கு வருவார். ஆனால், அந்த கார் குறித்த விவரம் எங்களுக்குத் தெரியாது என்கின்றனர், காவியன் நகர் மக்கள். 

மேலும் அவர்கள் கூறுகையில், "எங்கள் காம்பவுண்டில் மொத்தம் 15 வீடுகள் உள்ளன. அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரிப் பேராசிரியை, மாணவிகளிடம் பேசியதாக ஆடியோ வெளியான தகவலைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தோம். அந்த ஆடியோவில் பேசியது நிர்மலா தேவி என்று எங்களுக்குக்கூட ஆரம்பத்தில் தெரியாது. ஏனெனில், இந்த காம்பவுண்டில் இருக்கும் யாரிடமும்  நிர்மலா தேவி பேச மாட்டார். தான் உண்டு, தன் வேலை உண்டுனுதான் இருப்பார். காலையும் மாலையும்  வீட்டில் ஆள் நடமாட்டம் இருக்கும். அப்போதுகூட அந்த வீட்டில் அமைதி நிலவும். நிர்மலா தேவிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டதும், மூத்த மகளுடன் அவர் சென்றுவிட்டார். அதன்பிறகு, இளைய மகளுடன்தான் நிர்மலா தேவி குடியிருந்தார். 

 நிர்மலா தேவியின் உறவினர்கள், அருப்புக்கோட்டையில் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் இந்த வீட்டுக்கு வந்ததில்லை. நிர்மலா தேவியின் பெற்றோர் வருவார்கள். ஆடியோ விவகாரம் வெளியானதும், போலீஸார் வீட்டுக்கு வந்தபோதுதான் காம்பவுண்டே பரபரப்பானது. அப்போதுதான், நிர்மலா தேவியின் சகோதரர் ரவி அங்கு வந்தார். அவரிடமும் போலீஸார் விசாரித்தனர். வீட்டிலிருந்து சில பொருள்களை போலீஸார் எடுத்துச்சென்றனர். நிர்மலா தேவி கைதுசெய்யப்பட்ட பிறகு, அவரது இளைய மகள், தாத்தா பாட்டியின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் வீடு பூட்டியே கிடக்கிறது. நிர்மலா தேவியை விசாரிக்க தினமும் பலர் வருகின்றனர். அவரைப் பற்றி எங்களுக்குத் தகவல் தெரிந்தால்தானே சொல்ல முடியும். அவரது வாழ்க்கை பரம ரகசியமாகத்தான் இருக்கிறது" என்றனர். 

 நிர்மலா தேவியைப் பொறுத்தவரை அருப்புக்கோட்டை பகுதியிலும், அவர் வேலைபார்த்த கல்லூரியிலும் திறமையான பேராசிரியை என்ற பேச்சு உள்ளது. மற்றபடி மாணவிகளிடம் சகஜமாகப் பேசுவார் என்றும் சொல்கின்றனர். அவரது மாணவிகளிடம் போனில் பேசிய ஆடியோவைக் கேட்டபிறகுதான், நிர்மலா தேவியின் பெயர் பிரபலமாகிவிட்டது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, நிர்மலா தேவி ஒரு அம்புதான். அதை ஏவிவிட்டவர்கள்தான் யார் என்று போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர். இதுவரை கல்லூரி நிர்வாகத்திடமும் அவரது உறவினர்கள், நண்பர்கள், பல்கலைக்கழகத்தினர் எனப் பலரிடம் விசாரித்த பிறகும், இந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழாமல் இருக்கின்றன. நிர்மலா தேவி குறித்த தகவல்களை ஓரளவு சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார், அதை வெளியிடவும் தயக்கம் காட்டுகின்றனர்.

காவியன் நகர்- நிர்மலா தேவி வீடு

நிர்மலா தேவி தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முருகனை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரிடமும் தனியாக விசாரணை நடந்துவருகிறது. நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ள கருப்பசாமியையும் விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், நிர்மலா தேவியின் வழக்கில் திடீர் திருப்பமாக, மேலும் இரண்டு மாணவிகள் அவர்மீது புகார் கொடுத்துள்ளனர். அவர்களிடமும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவுசெய்துள்ளனர். 

 நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி மாணவர்கள், தேர்வு விடுமுறையில் உள்ளனர். இதனால், நிர்மலா தேவி குறித்த விவாதம் கல்லூரி வளாகத்தில் இல்லை. ஆனால், அருப்புக்கோட்டை மக்களிடையே நிர்மலா தேவியின் பேச்சு டீக்கடை தொடங்கி எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளது. மக்கள் உன்னிப்பாகக் கவனித்துவரும் இந்த வழக்கில், நிர்மலா தேவியை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், தன்னுடைய சுயவிருப்பத்தின்பேரில் விலகுவதாக அறிவித்துவிட்டார். அதன்பிறகு, நிர்மலா தேவிக்கு வழக்கறிஞர் யாருமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு ஆஜராக சீனியர் வழக்கறிஞர் தலைமையில் ஒரு டீம் தயாராகிவருகிறது. அந்த டீம், நிர்மலா தேவியை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சி.பி.சி.ஐ.டி போலீஸாரோ, நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வழக்கில் இன்னொரு முக்கியப் புள்ளிக்கு வலைவிரித்துள்ளனர். அவரை விரைவில் கைதுசெய்ய முனைப்போடு களமிறங்கியுள்ளனர்.