'ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் உறங்கமாட்டேன்'- உயர்நீதிமன்ற வளாகத்தில் வைகோ ஆவேசம்

vaiko

``என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலை எடுக்கவிடமாட்டேன். அதுவரை உறங்கமாட்டேன்'' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகக் கூறினார்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதிக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய, மாநிலச் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்த வைகோ பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலையின் ஆபத்தை அறிந்து நான் 22 வருடங்களாகப் போராடிவருகிறேன். ஆரம்பத்தில் நான் அரசியல் கட்சியைத் தாண்டி அப்பகுதி மக்களைத் திரட்டி போராடியபோது, அந்த விவகாரம் என்மீது  திசை திருப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டரீதியாக சந்தித்து வருகிறேன். இந்த ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய்களும் சரும நோய்களும் மக்களுக்கு ஏற்படத் தொடங்கியது. விவசாயிகளும் மீனவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதன் பாதிப்பால் விவசாய நிலங்களும் கடல் வாழ் உயிரினங்களும் நாசக்கேடானது. ஆனால், அது தெரிந்தும் ஸ்டெர்லைட் ஆலை, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு சம்பாதிக்கத் துடித்தது. அதற்கு அரசும் தொடர்ந்து மறைமுகமாக அவர்களுடன் கைகோத்து ஆதரவு தெரிவித்து வருகிறது.

தற்போதுள்ள அ.தி.மு.க அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஆனால், வெளியில் நல்லவர்கள்போல் நாடகமாடுகிறது. மார்ச் 31ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு முதல் கட்ட யூனிட்டுக்கு அனுமதி கிடைக்காதபோது கூட தமிழக அரசு அதை உணர்ந்து மூட உத்தரவிட முன்வராதது ஏன்?. ஸ்டெர்லைட் முதல் யூனிட் ஆலை செயல்படாதபோதும், இரண்டாம் யூனிட்டுக்கு அனுமதி கிடைக்காதபோது தமிழக அரசு ஏன் மறைமுகமாக உதவி செய்ய நினைக்கிறது. என் உயிர் இருக்கும் வரை ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தலை எடுக்கவிடமாட்டேன். அதுவரை உறங்கமாட்டேன்'' என்று ஆவேசமாகக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!