நெல்லை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வாகனப் பிரசாரம்!

சென்னையில் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆசிரியர் சங்கத்தினர் நெல்லை மாவட்டத்தில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆசிரியர் சங்கத்தினர் நெல்லை மாவட்டத்தில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

கோரிக்கை விளக்க பிரசாரம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு இடையே இருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பாக. மே 8-ம் தேதி சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு துறைகளின் சங்கத்தினர் மற்றும் ஊழியர்களிடம் ஆதரவு திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வணிகவரித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அலுவலகம், கால்நடைத்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்களிடம் தங்களின் கோரிக்கைகளை விளக்கும் நோட்டீஸ்களை அளித்து பிரசாரம் செய்து வருகின்றனர். 

பிரசார பயணம்

அத்துடன், தற்போது பத்தாவது, பதினொன்று மற்றும் பிளஸ் டூ தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அதில் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களிடமும் பிரசாரம் செய்யப்பட்டதுடன் கோரிக்கைகளை விளக்கிக் கூறப்பட்டது. தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கம், மூட்டா அமைப்பு, நெடுஞ்சாலைத்துறை சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் இன்றைய பிரசாரப் பயணத்தில் பங்கேற்றனர். 

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் மணிமேகலை, மாவட்டச் செயலாளர் பால்ராஜ் தலைவர் ராஜ்குமார், உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த வாரம் மாவட்டம் முழுவதும் தொடந்து வாகனப் பிரசாரம் மேற்கொண்டு தங்களின் கோரிக்கைகளுக்குப் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவர்கள் மற்றும் பணியாளர்களின் ஆதரவைத் திரட்டி, கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!