`கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இணையம் வழி புத்தகம் வாசிப்பு!’ - அசத்தும் அரசுத் தொடக்கப் பள்ளி

ஆசிரியர் விடுமுறை எடுத்தாள் ஏன் விடுமுறை எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்கிறான் உரிமையோடு 

`கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இணையம் வழி புத்தகம் வாசிப்பு!’ - அசத்தும் அரசுத் தொடக்கப் பள்ளி

ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளி

மதுரை, யானைமலை அடிவாரத்தின் நரசிங்கபெருமாள் கோயில் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது, யா.ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. மதுரையில் அட்மிஷனுக்கு அலைமோதும் ஆரம்ப அரசுப் பள்ளி என்றால், அது ஒத்தக்கடை பள்ளிதான்.  ஒத்தக்கடையின் பாரம்பர்ய உணவான அல்வாவையும் முறுக்கையும் சுவைத்தபடி பள்ளிக்குள் நுழைந்தோம். மரங்கள் சூழ்ந்த வகுப்பறைகள், சுகாதாரமான கழிவறைகள், தண்ணீர் வசதி எனப் பார்த்தவுடன் மனதில் கம்பீரமாக நினைவில் நிற்கிறது பள்ளிச் சூழல். மாணவர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன், புன்னகையுடன் எழுந்து வந்தார்.

தென்னவன்

``எங்கள் பள்ளியில் ஏற்படுத்திய சில மாற்றங்களே இன்று நீங்கள் தேடிவரும் அளவுக்குப் பெருமைக்குரிய பள்ளியாக மாறியிருக்கிறது. மாற்றம் என்றால், கட்டடம் மட்டுமல்ல. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனதையும், பெற்றோர்கள் மனதையும் மாற்றியிருக்கிறோம். `குழந்தை நேயக் கல்வி'யை எங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம் அதனால், மாணவன் தன்னை முதலில் உணர்கிறான் . ஆசிரியர்களை முழுமையாக நம்புகிறான். வீட்டில் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறான். அதனால், அவனுக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லி, மனதில் இருக்கும் வலியைப் போக்குகிறோம். பள்ளிக்கு விருப்பத்துடன் வருகிறான். நாம் அவனுடன் நண்பனாகப் பழகும்போது ஆசிரியர் விடுமுறை எடுத்தால், ஏன் விடுமுறை எடுத்தீர்கள் என்று உரிமையுடன் கேட்கிறான். ஆசிரியரின் விடுமுறைக்கு வருத்தம் கொள்கிறான். அந்த அளவுக்கு ஆசிரியருடன் இணக்கமாகிறான். அவனது கற்றல் மிக மிக எளிமையாகிறது'' எனப் புன்னகையுடன் தொடர்கிறார்.

``பாட்டு, விளையாட்டு, ஓவியம், நடனம், கதை சொல்லல், கதை கேட்டல் என மாணவர்களுக்குப் பிடித்த விசயங்களை வழங்குகிறோம் . அதனால், கல்வி அவனுக்கு மிகவும் பிடித்ததாக மாறுகிறது. இதனால்தான் எங்கள் பள்ளிக்கு வருடா வருடம் சேர்க்கை கூடுகிறது . முன்பு ஒத்தகக்டை பகுதியில் வேறு பள்ளியே இல்லாதபோது, இந்தப் பள்ளியில் அவ்வளவு மாணவர்கள் பயின்றுள்ளனர். நாளடைவில் தனியார் பள்ளிகள் வருகையால், மாணவர்கள் எண்ணிக்கை 100 ஆகக் குறைந்தது. நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு முயற்சிகளைக் கையில் எடுத்தேன். தற்போது 500 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம், இந்த நட்புரீதியான கல்விதான். ஒத்தக்கடையில் தற்போது 8 பள்ளிகள் செயல்பட்டாலும், அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளியாக இந்தப் பள்ளி விளங்குகிறது.

ஆசிரியர்கள் தங்களை அறியாமல் குரலை உயர்த்திப் பேசும்போது, மாணவன் தன் நிலையிலிருந்து பின்வாங்குகிறான். தெரிந்த பதில்களையும், தவறாக இருக்குமோ என்ற குழப்பத்தில் சொல்ல தயங்குகிறான். எனவே, ஆசிரியர் என்பவர் எந்த நிலையிலும் தன்னை மறந்துவிடக் கூடாது. அதைத்தான் செய்கிறோம். அதற்கான பரிசாக மாணவர்கள், இந்தப் பள்ளியைச் சிறந்த பள்ளியாக மாற்றியிருக்கிறார்கள்'' என்கிறார் தென்னவன்.

அவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய ஆசிரியர் மோசஸ், ``எங்கள் பள்ளி மாணவர்கள், நாங்கள் ஒருநாள் பள்ளிக்கு வராவிட்டாலும்,  `ஏன் வரவில்லை?' எனக் கேட்பார்கள். அந்த உரிமையை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். நாளை விடுமுறை எடுக்கப்போவதாக இருந்தால், முன்கூட்டியே மாணவர்களிடம் சொல்லி விடுவோம். எங்கள் தலைமை ஆசிரியர் தென்னவன், `கலகல வகுப்பறை' என்ற திட்டம் மூலம் மாணவர்களுக்கும் எங்களுக்கும் இடையே மிகப்பெரிய நட்பு பாலத்தை உருவாக்கியிருக்கிறார். எங்கள் வகுப்பின் ஒவ்வொரு மாணவன் பற்றிய விஷயங்கள் எங்கள் மனங்களில் பதிவாகியிருக்கின்றன. வீட்டின் எந்தக்  கஷ்டத்தையும் பள்ளியின் தாய், தந்தையாகிய எங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். முடிந்த யோசனைகளைச் சொல்லி அவர்களுக்கு வழிகாட்டுகிறோம். ஆண்டுதோறும் பல்வேறு விழாக்களை நடத்துகிறோம். அவை, வெறும் ஆட்டம்பாட்டம் மட்டும் அல்ல. நமது பாரம்பர்யம், கலை, பழக்க வழக்கம், கம்ப்யூட்டரில் இணையம் வழியே புத்தகம் வாசிப்பது, போட்டோ ஷாப் எனப் பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறோம். எங்கள் பள்ளியைவிட்டு வெளியேறும் ஒவ்வொரு மாணவரும் அறிவுடன் மனம் நிறைய அன்பையும் சுமந்து சென்று மற்றவர்களுக்குப் பகிர வேண்டும்'' என்கிறார் மகிழ்வான குரலில்.

 

ஒத்தக்கடை துவக்க பள்ளி மாணவர்கள்

இதுபோன்ற அரசுப் பள்ளிகள் ஊருக்கு ஒன்று இருந்தால், எந்த ஒரு மாணவருக்கும் கல்வி கசக்காது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!