வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (26/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (26/04/2018)

`விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிடும் மார்க் துறைமுகம்!’ - விழித்துக்கொள்ளுமா புதுவை அரசு

Karaikal Marg Port

காரைக்காலில் உள்ள தனியார் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி கையாளுவதற்கான அனுமதி வரும் ஏப்ரல் 30-ம் தேதியுடன் காலாவதியாகிறது. சட்டத்தை மதிக்காமல் விதிமுறைகளை மீறி நிலக்கரி துகள்களைக் காற்றில் பறக்கவிட்டு பொதுமக்களுக்குப் பெரும் இன்னலை ஏற்படுத்தி வரும் துறைமுக நிர்வாகம் புதுவை அரசிடம் மீண்டும் நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதி கேட்கிறது. அனுமதி அளிக்குமா புதுவை அரசு? இதுதான் இப்பகுதி மக்களின் மில்லியன் டாலர் கேள்வி!  

மார்க் துறைமுகம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியாரது மார்க் துறைமுகம் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதனால் ஏற்படும் கரித்துகள் காற்றில் கலந்து அருகில் உள்ள பல கிராம மக்களின் உயிரைப் பறிக்கும் எமனாக இருக்கிறது. இது பற்றிய மக்கள் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.  

எனவே, 04.09.2017 அன்று தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு கமிட்டியின் மூலமாக மார்க் துறைமுக நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியது.  அதில், `காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரியைக் கையாளும்போது முழுமையான கன்வேயர் பெல்ட் சிஸ்டத்தினை லோடிங் செய்யும்போதும், அன்லோடிங் செய்யும்போதும் பயன்படுத்த வேண்டும். இதனை 2018 ம் ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதிக்குள் அமல்படுத்திட வேண்டும். தவறும்பட்சத்தில் அந்தத் தேதிக்குப் பிறகு அங்கு நிலக்கரி கையாளுவது நிறுத்தப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், மார்க் துறைமுகத்தில் 3 இடங்களில் காற்று மாசு அளவீட்டுக் கருவியினைப் பொறுத்தி அதன் அளவீடுகளை 24 மணிநேரமும் மக்கள் பார்க்கும் வண்ணமாக துறைமுக நுழைவு வாயிலில் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவித்திட வேண்டும் என்றும், அதன் கட்டுப்பாட்டு அமைப்பு டெல்லியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்திருந்தது.  ஆனால், மார்க் துறைமுகம் இந்த அறிவுரைகளை இதுநாள் வரை பின்பற்றவில்லை. இருப்பினும், மார்க் துறைமுகம் மீண்டும் நிலக்கரியை இறக்குமதி செய்ய புதுவை அரசிடம் அனுமதி கேட்கிறது. உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத மார்க் துறைமுகத்திற்கு நிலக்கரியைக் கையாளும் அனுமதி அளிக்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.