`காவிரிக்காக 400 பேரின் தாலியை இழந்திருக்கிறோம்!’ - கரூரில் பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

``காவிரி வறண்டதால், கர்நாடகம் நமக்குரிய தண்ணீர் உரிமையை மறுத்ததால், இதுவரை 400 தாலிகளை இழந்திருக்கிறோம். இனி காவிரிக்காக ஒரு தாலியைக்கூட இழக்கமாட்டோம். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எல்லோரும் திரண்டு இன்னொரு ஜல்லிக்கட்டுப் புரட்சி போன்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்" என்று கரூரில் தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அதிரடியாகப் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதற்கு பதிலாக, அதிகாரமற்ற ஓர் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால்,வெகுண்டெழுந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசைக் கண்டித்துத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பி.ஆர்..பாண்டியன், வேதாரண்யம் தொடங்கி, திருவாரூர் வரை 25 ம் தேதி முதல் வரும் 29 ம் தேதி வரை இருசக்கர வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பயணத்தின் ஒரு பகுதியாக கரூர் நகருக்கு பி.ஆர்.பாண்டியன் இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பை மதிக்காமல், கர்நாடக மாநில முதலமைச்சர், 'நாங்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம். காவிரியில் தண்ணீர் விட மாட்டோம்' என்று மத்திய அரசுக்கு வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு அந்தக் கடிதத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அப்புறம் என்ன, ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவம், இந்திய அரசியலமைப்புச் சட்டம்?. இவை எல்லாம் சும்மாதானே?. காவிரிக்காக இதுவரை 400 தாலிகளை இழந்திருக்கிறோம். இனி ஒரு தாலியைக் கூட இழக்கவிட மாட்டோம். அதேபோல், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் எல்லோரும் தன்னிச்சையாக ஜல்லிக்கட்டிற்காகப் போராடியதுபோல் காவிரிக்காகவும் ஆங்காங்கே திரண்டு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். பதவி வெறிபிடித்த மோடி அரசு, தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் தங்கள் எம்.பி-க்களை ராஜினாமா செய்ய வைத்து, மோடிக்கு நெருக்கடி கொடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?. சும்மா கண்துடைப்புக்காக காவிரிக்காகப் போராட்டம் நடத்துறோம்ன்னு சொல்ற ஈ.பி.எஸ்ஸூம்,ஓ.பி.எஸ்ஸூம் துணிந்து மோடியை இந்த விசயத்தில் கண்டிக்கவில்லையே ஏன்?. காவிரி மேலாண்மை வாரியம் போராட்டங்களால் அமைக்கப்பட்ட பின், அடுத்து காவிரியில் தொடரும் மணல் குவாரி பிரச்னை, டெல்டாவில் தொடரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்னைகளுக்காகவும் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்று ஆவேசமாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!