'திரையுலகிலிருந்து யாருமே வரலியே!’ - கலங்கும் எம்.எஸ்.ராஜேஸ்வரி மகன்

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியின் உடலுக்குத் திரைத்துறையிலிருந்து அஞ்சலி செலுத்த யாருமே வரவில்லை என அவரின் மகன் கலங்கினார். 

எம்.எஸ்.ராஜேஸ்வரி

'பொன்னான வாழ்வே' 'கோழி ஒரு கூட்டிலே' 'சின்ன பாப்பா' 'பூப்பூவா பறந்து போவும்' என்று மழலைக் குரலால் மனதை மயக்கிய பழம்பெரும்  பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவருடைய மறைவு குறித்து மகன் ராஜ் வெங்கடேஷிடம் பேசினோம். ''கடந்த ஆறுமாத காலமாக வயிற்றில் குடல் மற்றும் லிவர் பிரச்னையால் அம்மா அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு அம்மாவின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. எங்க குடும்பம், உறவினர்களைவிட தமிழ் சினிமா உலகின் மேல் அதீதமான அன்புகொண்டு நேசித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர், டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருக்கிறார். இன்று மாலை அடக்கம் செய்யும் இடம் குரோம்பேட்டை என்று அறிவித்திருந்த நிலையிலும், இதுவரை சினிமா உலகிலிருந்து யாருமே என்னைத் தொடர்பு கொண்டு விசாரிக்காதது மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என் அம்மா மிகவும் நேசித்த சினிமாவிலிருந்து யாராவது அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று ஒவ்வொரு நிமிடமும் காத்துக்கொண்டிருக்கிறேன். அப்போதுதான் என் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையும் என்பதை மறந்து விடாதீர்கள்'' என்று கலங்கினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!