'சாகுபடிக்கு நீர் கிடைக்குமா?’ - குறைதீர் கூட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்

பலப்படுத்தும் பணிக்காகப் பேச்சிப்பாறை அணை வற்றவைக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

லப்படுத்தும் பணிக்காகப் பேச்சிப்பாறை அணை வற்றவைக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேச்சிப்பாறை அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநிலப் பாரம்பர்யபடி கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு போகம் நெல் விவசாயம் நடக்கிறது. கேரள மாதப்படி கன்னி மாதம், கும்ப மாதங்களில் செய்யப்படும் சாகுபடி என்பதால் இந்தப் பெயர் வந்தது. ஏற்கெனவே கும்பப்பூ சாகுபடி முடிந்துவிட்டது. அடுத்ததாகக் கன்னிப்பூ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். ஆனால், தடுப்பணையைப் பலப்படுத்தும் பணி நடப்பதால் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட்டது. இதனால் கன்னிப்பூ சாகுபடியைத் தொடங்க வேண்டுமா, சாகுபடி நிறைவடையும் வரை தண்ணீர் கிடைக்குமா எனக் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். ஜூன் மாதத்துக்குள் அணையில் சுவர் அமைக்கும் பணியை ஒரு மட்டத்துக்குக் கொண்டுவந்துவிடுவதாகவும் பெருஞ்சாணி அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் கூட்டம்

இதற்குப் பதிலளித்துப் பேசிய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, "பெருஞ்சாணி அணையை எப்போது திறக்கப் போகிறீர்கள். விவசாயம் தொடங்கிய பிறகு, தண்ணீர் கிடைக்காமல் இருந்தால் அவர்களுக்கு நஷ்டமாகிவிடும். முதலில் தண்ணீர் வரும் சானல்களை சரி செய்யுங்கள். வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும்" என அதிகாரிகளிடம் கூறியவர், "விவசாயத்துக்குத் தண்ணீர் வழங்குவது குறித்து வரும் வாரத்தில் தனி கூட்டம் நடத்தி முடிவு அறிவிக்கப்படும். பேச்சிப்பாறை அணையிலிருந்து மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க முயற்சி எடுத்து வருகிறோம். வாகனங்கள் வனத்துறை சாலையில் செல்ல வேண்டியிருப்பதால் வனத்துறையிடம் அனுமதி பெற்று விவசாயிகளுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். விவசாயிகளுக்கு நெல்லுக்கு உரியவிலை கிடைப்பதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து விலை நிர்ணயம் செய்வது குறித்து பட்டியல் கேட்கப்படும்" என்றார். விவசாயிகள் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாக இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி நல்லபடியாக நடக்க கலெக்டர் நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!