'தமிழக அரசைவிட ஆளுநர் சிறப்பாக செயல்படுவது பற்றி நாடே பேசுது!’ - துரைமுருகன் விமர்சனம்

தமிழக அரசு செயல்படுவதைவிட ஆளுநர் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை இந்த நாடே பேசிக்கொண்டிருக்கிறது என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

துரைமுருகன்

தமிழக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவியும் சேலம் தி.மு.க, கிழக்கு மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ராஜாவின் தாயாருமான ரங்கநாயகி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் மரணம் அடைந்தார். வீரபாண்டி ராஜா வீட்டுக்குச் சென்று ரங்கநாயகி அம்மாவின் படத்துக்கு தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் மலர் தூவி அஞ்சலி செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகனிடம், தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறி இருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த அவர், ''தமிழக அரசு செயல்படுவதை விட ஆளுநர் சிறப்பாக செயல்பட்டு வருவதை இந்த நாடே பேசி கொண்டிருக்கிறது'' என்றார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மெத்தனமாக மத்திய அரசு செயல்படுகிறதா என்ற கேள்விக்கு, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் பினாமி அரசாகச் செயல்படும் தமிழக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இரண்டு அரசுகளால் தமிழகத்துக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசு. இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை பணத்தை வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருப்பார்கள். மீண்டும் இந்த ஆட்சி வராது’ என்று பதிலளித்தார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் பல கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''நிர்மலா தேவி விவகாரத்தில் ஒரு கமிஷன் அமைத்திருந்தால் விசாரணை முறையாக நடந்திருக்கும். ஆனால், சில முக்கிய புள்ளிகளை தப்ப வைப்பதற்காகவே பல கமிஷன் அமைக்கப்பட்டு இருப்பதாகச் சந்தேகம் ஏற்படுகிறது என்றவரிடம், குட்கா ஊழலை சி.பி.ஐ விசாரிக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்து கேட்கப்பட்டது. ''குட்கா விவகாரத்தில்  தி.மு.க செயல் தலைவர் சட்டசபையில் கூறியது உண்மை என்பது உயர் நீதிமன்ற உத்தரவின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சரும் தமிழக முதல்வரும் பதவி விலக வேண்டும்’ என்று துரைமுருகன் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!