`அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!’ - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

ஊதிய முரண்பாட்டைக் களைந்திடக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

`சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 23-ம் தேதி முதல் சென்னையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். முதல் நாளன்று நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரக அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களைக் கைதுசெய்த போலீஸார், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தனர். விடிய விடிய அந்த மைதானத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாநிலை மற்றும் உடல்சோர்வு காரணமாக 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் அரசுப் பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஆசிரியர்களுக்கு தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

செங்கோட்டையன்

இந்தநிலையில், சென்னை கிண்டியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்தனர். அமைச்சர் முன்னிலையில் பழச்சாறு அருந்தி, தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.  இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  “ஒரு நபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை செய்யபடும். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!