உறுப்பு கல்லூரி பணியாளர் நியமனத்தில் முறைகேடு? - பெரியார் பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சை

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்குப் பணி நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பு கல்லூரிகளில் பணிபுரியாமல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதனால் இவர்களின் பணி நியமனத்தின் போது ஏதாவது கோல்மால் நடந்திருக்கலாம் என்று பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள் சந்தேகமடைந்துள்ளார்கள்.

இதுப்பற்றி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர்களிடம் பேசிய போது, ''சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகள் மேட்டூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி, அரூர், சேந்தமங்கலம் என 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுவாமிநாதன் இருந்தபோது இந்த உறுப்பு கல்லூரிகளுக்கான பணியாளர்களை நியமனம் செய்தார்.

உறுப்பு கல்லூரிக்குப் பணி நியமிக்கப்பட்டவர்கள் அங்கு பணிபுரியாமல் ஓரிரு நாள்களிலேயே பல்கலைக்கழகத்திற்கு வந்து விட்டார்கள். இன்று வரை அவர்கள் உறுப்பு கல்லூரிகளுக்குச் செல்லாமல் பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றி வருகிறார்கள். மேட்டூர் உறுப்பு கல்லூரியில் நிதியாளராக நியமிக்கப்பட்ட சிவராஜ், அங்கு பணிபுரியாமல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அதேபோல எடப்பாடி உறுப்பு கல்லூரியில் நிதியாளராக நியமிக்கப்பட்ட சங்கீதா பல்கலைக்கழகத்தில் நிதி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். மேட்டூர் உறுப்பு கல்லூரியில் கம்யூட்டர் ஆபரேட்டராகப் பணியமர்த்தப்பட்ட சிவராமன் பல்கலைக்கழக பதிவாளரின்  இரண்டாவது நேர்முக உதவியாளராக உள்ளார். மேட்டூர் உறுப்பு கல்லூரியில் கண்காணிப்பாளர் பணி நியமிக்கப்பட்ட கோமதி பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பட்டு அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.  

இவர்கள் அனைவரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சுவாமிநாதன் இருந்த போதே நியமிக்கப்பட்டார்கள். நியமிக்கப்பட்ட இடத்தில் பணி புரியாமல் வேறுவோர் இடத்தில் பணி புரிவதை பார்க்கும் போது இவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பெயருக்கு அங்கு பணி நிரப்பப்பட்டு இங்கு பல்கலைக்கழகத்தில் பணி புரியுங்கள் என்று வாய்மொழி ஒப்பந்தம் நடைப்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது'' என்றார்கள்.

இதுப்பற்றி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மணிவண்ணனிடம் பேசிய போது, ''இது அனைத்தும் தற்காலிக ஏற்பாட்டால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்கள். உறுப்பு கல்லூரிகள் விரிவாக்கம் செய்த பிறகு அவர்களுடைய பணிக்குத் திரும்புவார்கள்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!