குரங்கணி மீட்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்குப் பாராட்டு!

குரங்கணி காட்டுத்தீ விபத்து மீட்புப் பணியில், சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்குப் பாராட்டு.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மாதம் 9ம் தேதி டிரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி பலியான சம்பவம் அனைவரும் அறிந்ததே. விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களை குரங்கணி, கொட்டக்குடி, முதுவாகுடி மலைகிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் மீட்டனர். அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்ட மாவட்டக் காவல்துறையைப் பாராட்டும் விதமாக இன்று, மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். இதில் ஓர் ஆய்வாளர், 4 சார்பு ஆய்வாளர்கள், 41 ஆயுதப்படை தலைமைக் காவலர்கள், 12 நக்சல் தடுப்புப் பிரிவு காவலர்கள், 182 பயிற்சிக் காவலர்கள் என மொத்தம் 240 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உடன் இருந்தார்.

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்களை மலையிலிருந்து கீழிறக்க எந்த வித வசதிகளும் இல்லாத நிலையில், குரங்கணி வாழ் மக்களின் போர்வை, சேலை, வேஷ்டி போன்றவற்றை கம்புகளில் கட்டி 'டோலி' போன்ற அமைப்பை ஏற்படுத்தி தூக்கிவந்தனர். ஒரு புறம் எரியும் மலை, இன்னொரு புறம் அதில் சிக்கியவர்கள், மறுபுறம் வெளிச்சமின்மை என மீட்புப் பணி கடுமையாகிக் கொண்டிருந்த நேரத்தில், 183 பேர் கொண்ட பயிற்சிக் காவலர்களின் பங்களிப்பு மிகச்சிறப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!