குப்பையில் இருந்த முதியவருக்கு ஆதரவளித்த திருச்சி ஆணையர்..! விகடன் செய்தியில் துளிர்த்த மனிதம்!

சமூக ஆர்வலர்களால் காப்பாற்றப்பட்ட குப்பையில் கிடந்த முதியவரை திருச்சி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விகடன் செய்தி எதிரொலி காரணமாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

திருச்சி

திருச்சி காவிரி பாலத்தின் அடியில் தேங்கியிருந்த குப்பைகளில் பரிதாபமாகக் கிடந்த முதியவர் ஒருவர் சமூக ஆர்வலர்களால் சமீபத்தில் காப்பாற்றப்பட்டார். இந்த விவகாரத்தை ஸ்பாட் விசிட்டில் கவர் செய்து வெளிகொண்டுவந்தது விகடன். அந்தச் செய்தியின் எதிரொலியாக காப்பாற்றப்பட்ட அந்த முதியவரை, திருச்சி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அவருக்கான மருத்துவ உதவிகளையும், இதர உதவிகளையும் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் நடந்து போகும்போது வழியில் குப்பைகள் கிடந்தால், அதனைச் சேகரித்து குப்பையில்லா மாநகரமாகத் திருச்சியை உருவாக்கும் வகையில், 'திருச்சி பிளாக்கிங்' எனும் பெயரில், கடந்த 22-ம் தேதி ஒரு திட்டம் தொடங்கப்பட்டது. இது, தூய்மை இந்தியா சார்பில் தொடங்கப்பட்ட திட்டமாகும். தமிழ்நாட்டில் முதன்முறையாகத் திருச்சி மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, சமூக வலைதளங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்மூலம், கடந்த ஒரு வாரத்தில் 3,000 பேர் அதில் பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில், திருச்சி மாம்பழச் சாலை, காவிரிக்கரையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராசாமணி, திருச்சி மாநகரக் காவல் துறை ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, எம்.பி குமார், திருச்சி காவல் துறை துணை ஆணையர் சக்திகணேஷ், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பண்பலை தொகுப்பாளர் சகா உள்ளிட்டவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு காவிரிக்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், 'யுகா' பெண்கள் அமைப்பின் தலைவி அல்லிராணி, திருச்சி மருத்துவக் கல்லூரி டீன் அனிதா அடங்கிய குழுவினர் குப்பைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, காவிரி பாலத்துக்கு அடியில் குப்பைகளோடு குப்பையாய் பசிமயக்கத்தில் ஒரு முதியவர் படுத்துக் கிடப்பதைப் பார்த்த குப்பையள்ளும் குழுவினர் அதிர்ந்துவிட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, அவரை  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, முதியவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த முதியவரின் பெயர் செல்வராஜ். சொந்த ஊர் விருத்தாசலம், சமையல் வேலை செய்துவரும் அவர், வேலைக்காகத் திருச்சி வந்துள்ளார். அவருக்குக் கிட்னி, மஞ்சள்காமாலை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. இங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே, அவரால் சமையல் வேலை செய்ய முடியாத சூழலில் பட்டினியாகக் கிடந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விகடன்.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முதியவர் மீட்பு திருச்சி

இந்தச் செய்தி வெளியான பிறகு திருச்சி மாநகர் அதிகாரிகள் பலரும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு முதியவரின் சிகிச்சைக் குறித்து விசாரிப்பதும், அவரை நேரில் சென்று சந்திப்பதுமாக உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த முதியவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ டீன் அனிதாவிடம் விசாரித்தார். அடுத்து முதியவர் செல்வராஜைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து அனைத்துவித உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அல்லிராணி, ''அந்த முதியவரைப் பார்த்த டீன் அனிதா பதறியபடி, ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தார். மருத்துவமனையில் சேர்த்தது முதல் இன்றுவரை சிகிச்சையளித்து வருகிறார். அன்றுமுதல் இன்றுவரை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் முதியவரைக் கண்காணித்து வருகிறார். தொடர்ந்து முதியவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இதற்கு முதன்முதலில் செய்தி வெளியிட்ட விகடனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இனி, குப்பையைவிட மனிதனுக்கு மதிப்பு அதிகம் என்று சிலர் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.

மனிதநேயமுள்ளவர்களால் மனிதர்கள் வாழவைக்கப்படுகிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!