குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 9 மாதங்களாகியும் சரிசெய்யப்படாத நிலை! சேலம் மாநகராட்சி அவலம்

காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டுமல்ல குடிப்பதற்கே இன்னும் கொஞ்ச நாள்களுக்கு மட்டுமே கிடைக்கும். பிறகு குடிப்பதற்குகூட காவிரி தண்ணீர் கிடைக்காது என்று அஞ்சி வரும் நிலையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் மேட்டூர் காவிரி குடிநீர் மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு 9 மாதம் ஆகியும் இன்னும் சரிசெய்யாமல் இருக்கிறது.

இதுபற்றி தி.மு.க., மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழரசன் கூறுகையில், ''சேலம் மாநகர 27-வது வார்டுக்கு உட்பட்ட சத்திரம் பகுதியில் மேட்டூர் குடிநீர் மெயின் குழாயில் கடந்த 31.7.2017 அன்று உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வாய்க்கால் போல ஓடியது. மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்ட பிறகு உடைப்பைச் சரி செய்யாமல், அதிலிருந்து வெளியேறும் தண்ணீரை சாக்கடைக்கு திருப்பி விட்டார்கள்.

அதன் பிறகு 18.8.2017 அன்று நேரடியாக மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் கொடுத்தோம். உடனே பார்வையிட்டு சரி செய்வதாக சொன்னார். ஆனால், இன்றைய தேதி வரை சரிசெய்யப்படவில்லை. இதற்கிடையில், 20 முறைக்கு மேல் பொக்லைன், பம்பிங் மோட்டார்களைக் கொண்டு வந்து குழி பறித்து சரிசெய்வதைப் போல வேலை செய்துவிட்டு செல்வார்கள். அடுத்த நாளே மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல ஓடும். மாநகராட்சி அதிகாரிகள் ஒருவேளை கணக்குக் காட்டி பணம் எடுத்துக்கொள்வதற்காக வேலை செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு அலட்சியமாக வேலை செய்கிறார்கள். கோடை காலத்தில் இனி குடிப்பதற்கே தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் அபாயத்தில் இருக்கும் இந்நிலையில், காவிரி குடிநீரை 9 மாதமாக வீணடித்து வருகிறார்கள்'' என்றார்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டதற்கு, ''அது 60 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பழைய பைப் லைன். அந்த உடைப்பு சரிசெய்வது கடினம். நாங்களும் பல முறை ஒட்டிப் பார்த்தும் நிற்கவில்லை. புதிய பைப் போட்டால்தான் சரிசெய்ய முடியும். மாநகராட்சி ஊழியர்கள் பைப்பின் உடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். நிச்சயம் அடைக்கப்படும்'' என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!