வெளியிடப்பட்ட நேரம்: 21:08 (26/04/2018)

கடைசி தொடர்பு:07:35 (27/04/2018)

'சூறைக்காற்றில் தொட்டிலுடன் சாலையில் தூக்கி வீசப்பட்ட குழந்தை!’ - கூடலூர் அருகே சோகம்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பகுதியில், இன்று அதிகாலையில் அடித்த பலத்த மழை மற்றும் சூரைக்காற்றால், தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட 3 வயதுக் குழந்தையை, ஊட்டிக்குச் சுற்றுலா சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் உதவியுடன் கேரள மாநிலம் பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பஜார் பகுதியில் இன்று அதிகாலை சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சூரைக்காற்றுக்குத் தாக்குப் பிடிக்கமுடியாமல் தேவர்சோலை முருகன் கோவில் எதிரே அமைந்திருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரை கொண்ட, சுமார் 6 வீடுகளின் கூரைகள் பெயர்ந்து கடும் பாதிப்புக்குள்ளாகின.

குறிப்பாகச் சூரைக் காற்றில் கூரை பறந்தபோது, வீட்டின் உள் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த அம்ஜத் என்பவரின் 3 வயது குழந்தை தொட்டிலுடன் ரோட்டில் வந்து விழுந்ததில், குழந்தைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், ''தேவர்சோலை பகுதியில் நள்ளிரவு சுமார் 12.00 மணி முதல் சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் தேவர் சோலை டவுன் பகுதியில் சுமார் 12-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் பெயர்ந்து, குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சூரைக்காற்றில், தொட்டிலுடன் 3 வயது குழந்தை ஒன்று ரோட்டில் தூக்கி வீசப்பட்டது. நல்ல வேளையாக அந்த நேரத்தில், ஊட்டிக்குச் சுற்றுலா வந்து திரும்பிய கேரள சுற்றுலாப் பயணிகள், வாகனத்தை நிறுத்தி, குழந்தையின் நிலையைக் கண்டு, உடனடியாக பத்தேரிக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்ல உதவினர். குறிப்பாக நேற்று சென்னை, பெங்களூரு அணிகளுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி இருந்ததால், குடியிருப்பு வாசிகள் பெரும்பாலானோர் தூங்காமல் இருந்தனர். இதனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட்ட போலீஸார், 'என்னப்பா பாத்து வீடு எல்லாம் கட்டியிருக்கக் கூடாதா’ என்று அலட்சியமாகக் கூறியது எங்களை மேலும் கவலையடையச் செய்தது. காரணம் இங்கு வீடுகளை இழந்துள்ளவர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள்தான். அவர்கள் இந்த ஓடு, ஆஸ்பெட்டாஸ் வாங்கி வீடுகளைச் சீரமைக்க 2 மாதம் வேலை செய்ய வேண்டும். அதே போல, காலை வந்த வி.ஏ.ஓ., தாசில்தார் ஆகியோரும் நிவாரணம் குறித்து ஏதும் பேசாதது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது,” என்றனர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க