சதுப்பு நிலத்தில் சிக்கி காயமடைந்த குதிரையைக் காப்பாற்றிய கால்நடை சேவை அமைப்பு!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தலக்குந்தா பகுதியில் சேற்றில் சிக்கி காயமடைந்த குதிரையை உலகலாவிய கால்நடை சேவை அமைப்பினர் காப்பாற்றினர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த தலக்குந்தா பகுதியில் இருந்து குதிரை வண்டி உரிமையாளரிடமிருந்து உலகலாவிய கால்நடை சேவை அமைப்புக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர், தலக்குந்தா அருகில்  உள்ள சதுப்பு நிலத்தில், தனது குதிரை சிக்கி காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த சேவைக் குழு, குதிரையைப் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்றினர். இக்குழுவினர் கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில், வாகனங்களில் சிக்கி படுகாயமடைந்த குதிரைகளுக்கு சிகிச்சையளித்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ஊட்டி நகராட்சி நிர்வாகம், சாலைகளில் குதிரைகள் சுற்றித் திரிவதை குறைப்பதற்காக, நகர் பகுதியில் குதிரை மற்றும் உரிமையாளர்களை கணக்கெடுக்கத் துவங்கியுள்ளது. என்னதான் குதிரைகள் மற்றும் உரிமையாளர்களை கணக்கெடுத்தாலும், தெருக் குதிரைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதைக் குறைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து‘தி சொசைட்டி பார் தி பிரிவன்ஷன்-  ஆப் க்ரூவலிட்டி டு அனிமல்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த நாகினா ரெட்டி கூறுகையில், ''நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், ஊட்டியில் உள்ள குதிரை வண்டி உரிமையாளர்கள், குதிரைகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரும்பாலான குதிரை உரிமையாளர்கள் அவற்றை கொட்டகையில் வைத்து பராமரிப்பதில்லை. தெருக்களில் உலாவ விடுகின்றனர். இதனால் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது' என்றார். 

இதுகுறித்து சர்வதேச கால்நடைப் பயிற்சி மைய இயக்குநரான இயோனா ஓட்டர் கூறுகையில், 'குறைந்த பட்சம் குதிரைகள் முக்கிய சாலைகளில் நடந்து செல்வதையாவது தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதாவது, வாகனங்களில் சிக்கி காயமடையும் குதிரைகளின் எண்ணிக்கையாவது குறையும். ஊட்டி ஏரி மற்றும் படகு இல்லம் அருகே உள்ள ஓடுபாதையை குதிரை சவாரிக்காக ஒதுக்க நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இதனால் குதிரைகள் சாலைகளில் உலாவுவது குறையும்” என்றார். 

ஊட்டி நகர்ப் பகுதியில் மேய்ச்சல் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கும் பட்சத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள உரிமையாளர்களின் குதிரைகளை இரவில் அங்கு அடைக்கலாம். மேலும், குதிரைகள் எண்ணிக்கை உயர்வதற்கு முன்னர், நகர் பகுதியில் எவ்வளவு எண்ணிக்கையில் குதிரைகளை வைக்கலாம் என்பதை நகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!