காவிரியை மீட்டே தீருவோம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு | Let us recover the Cavery say Tn Chief Minister Edappadi Palinasamy

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/04/2018)

கடைசி தொடர்பு:08:01 (27/04/2018)

காவிரியை மீட்டே தீருவோம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசப் பேச்சு

'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் காவிரியை மீட்டே தீருவோம்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பேசினார்.

'எடப்பாடி பழனிசாமி

திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை விமானம்மூலம் திருச்சி வந்தார். மாலை 6 மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய அவர், அங்கிருந்து கார்மூலம்,   சுப்பிரமணியபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க புதிய அலுவலகக் கட்டடத்தைத் திறந்துவைத்தார். இதற்காக, பல கிலோமீட்டர்களுக்கு தோரணங்கள்,பேனர்கள் வைத்து அ.தி.மு.க-வினர் அசத்தியிருந்தனர்.  அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, டாக்டர்.விஜயபாஸ்கர் , எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும், எம்.பி-க்கள் ரத்தினவேல், மருதைராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.  முதல்வர் வருகைக்காகத் தொண்டர்கள், பெண்கள் சாலையோரம் காத்திருக்க, அவர்களைப் பார்த்து காரை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கைகொடுத்தார்.  அடுத்து, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

பழனிசாமி

தொடர்ந்து, “அம்மாவின்  நல்லாசியுடன் மாநகரம் மாவட்டக் கழகத்தின் கட்சி அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைகொள்கிறேன். திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க, கழகத்தின் கோட்டையாக விளங்குகிறது. மேலும், அம்மா அவர்களின் கோட்டை திருச்சி மாநகர மாவட்டம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சாதனைகளாக ஆக்கி அம்மா அவர்களின் கோட்டை திருச்சி மாவடடம் என்று நிருபித்து காட்டிய மாவட்டம் திருச்சி மாவட்டம், அம்மா  விட்டுச்சென்ற பணியை சிறப்பான முறையில் நாங்கள் தொடர்ந்து செய்துவருகின்றோம். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சாதனைகளாக்கி, மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டுமோ அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றிவருகின்றோம். காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை,  பாலாறு பிரச்னை போன்ற எந்த பிரச்சனை இருந்தாலும்  அம்மா காட்டிய  வழியில் நின்று வெற்றிபெறுவோம். கழக ஆட்சிக்கு எதிராக எதிர்கட்சிகள் தினம் தினம் பல போராட்டங்களை நடத்திவருகின்றன. அவற்றை மக்கள் நம்பவில்லை என்பதை இந்தப் பெருங்கூட்டம் காட்டுகிறது. எம்.ஜி.ஆர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என முதலில் 1983-ம் ஆண்டு கூறினார். அவர் வழியில், அம்மா சட்டப்போராட்டம் நடத்தி காவிரி உரிமையை மீட்டெடுத்தார். அதேபோல நாமும் காவிரியை மீட்போம்” என்றார்.

மேலும் அவர், முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரத்தின் பேரன் கபிலன் கருணாகரன் –காவியா ராமராஜ் ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி, தஞ்சை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அவர் 29-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதனால், திருச்சி மாவட்டம் முழுக்க பலத்தப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க