'திவாகரனை இயக்குவதே இவர்தான்' - வரிந்துகட்டும் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

"திவாகரனை இப்படிப் பேசவைத்து இயக்குபவரே எடப்பாடி பழனிசாமிதான்" என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டினார்.

கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில், கரூர் வடக்கு நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்புச் செயலாளருமான செந்தில் பாலாஜி,  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,  "சென்னை உயர் நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சி.பி.ஐ விசாரணைக்குத் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு முன்னர், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதில், இரண்டில் ஒன்று உடனடியாக நடைபெற வேண்டும்.

 எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் ஊழல்கள் மலிந்துவிட்டன. அனைத்து மட்டங்களிலும், அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் மலிந்துவிட்ட நிலையில், அதிகமான ஊழல்கள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அதற்கு உதாரணம்தான், குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. திவாகரன், வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைக்கிறார். திவாகரன், ஜெயலலிதாவின் ஆட்சியிலேயே பலமுறை சிறைக்குச் சென்று வந்திருக்கிலாம். திவாகரனை இப்படிப் பேசவைத்து இயக்குவதே எடப்பாடிதான். சசிகலாவினால்தான் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். திவாகரன் வேண்டுமானால், தனியாக ஒரு கட்சி ஆரம்பிக்கட்டும். சசிகலாவினால் தற்போது பதவி பெற்றவர்கள் தனியாக பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கினார்கள். ஆகவே, அவருடைய விசுவாசத்தை திவாகரன் பேச்சின் அடிப்படையிலேயே தெரியவருகின்றது.

மேலும், அ.தி.மு.க-வையும் சின்னத்தையும் மீட்டெடுத்து, நிச்சயம் டி.டி.வி.தினகரன் முதல்வர் ஆவார். ஆகவே, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், திவாகரனின் பேச்சைக் கண்டு, யாரும் செல்ல மாட்டார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மத்திய அரசிடம் தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்துவந்தார். இந்நிலையில், டி.டி.வி தினகரனின் குடும்பத்தாரையும் இயக்கிவந்தது திவாகரனின் பேச்சைவைத்தே தெரியவந்துள்ளது. ஆகவே, இவ்வளவு நாள்கள் வெளியே தெரியாத திவாகரனின் செயல்பாடுகள் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. அதாவது, பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!