வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (27/04/2018)

கடைசி தொடர்பு:10:42 (27/04/2018)

'2018-19-ம் ஆண்டுக்கான முன்னுரிமைக் கடன் இலக்கு ரூ.4192.13 கோடி'

"கரூர் மாவட்டத்தில் முன்னுரிமை ஆண்டு கடன் இலக்கு ரூ.4192.13 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என ஆண்டு கடன் திட்டத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்கள் கூட்டத்தில், 2018-19-ம் ஆண்டுக்கான முன்னுரிமைக் கடனாக ரூ.4192.13 கோடி வழங்கிடும் கடன் திட்ட அறிக்கை மற்றும் வட்டார வளன் சார்ந்த திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் வெளியிட்டார். இக்கூட்டத்தில்,  "கரூர் மாவட்டத்துக்கு 2018-19ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு ஊரக வங்கிகள் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கிட, வேளாண் கடனாக ரூ.1999.55 கோடியும், சிறு குறு மற்றும் நடுத்தர வர்க்கத் தொழில் மற்றும் ஏற்றுமதிக் கடனாக ரூ.1092.24 கோடியும் இதர முன்னுரிமைக் கடனாக ரூ.1100.34 கோடியும் என மொத்தம் ரூ.4192.13 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், வேளாண்துறைக்கு மட்டும் 47 சதவிகிதம் தொகை கடனாக வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு 26 சதவிகிதமும், இதர முன்னுரிமைக் கடன்களுக்கு 27 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான கடன் இலக்கை எய்திட வேண்டும். கடன் வழங்கும்போது தகுதிவாய்ந்த நபர்களைத் தேர்வுசெய்து கடன் வழங்குவதிலும், திரும்பப் பெறுவதிலும் முனைப்புடன் செயல்பட வேண்டும்" என்றார்.

மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் கடன், நீட்ஸ் திட்டக் கடன்கள் உள்ளிட்ட கடன்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்த வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார்.